Home அவசியம் படிக்க வேண்டியவை திரைவிமர்சனம்: வேற வழி இல்ல – தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய மலேசியப்படம்!

திரைவிமர்சனம்: வேற வழி இல்ல – தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டிய மலேசியப்படம்!

948
0
SHARE
Ad

11295773_997833170229807_5203105538569926606_nகோலாலம்பூர், ஜூன் 26 – இந்த விமர்சனத்தைத் தொடங்குவதற்கு முன்னர் இங்கு ஸாம்பி (Zombie) குறித்த ஒரு சிறிய அறிமுகம் செய்வது அவசியமாகிறது. காரணம் தமிழ்ப் படங்களில் ஸாம்பி நமக்கு மிகவும் புதியது. இதற்கு முன்னர் தமிழகச் சினிமாக்களில் மனிதச் சதைகளை வேட்டையாடும் பேய்கள் பற்றிப் பல படங்கள் வெளி வந்திருந்தாலும், அவை அனைத்தும் ரத்தக் காட்டேரி என்றும், பேய்கள் என்று மட்டுமே குறிப்பிடப்பட்டு வருகின்றன. இந்த ஸாம்பி என்பது ஆங்கிலப் படங்களில் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை.

இதுவரை தமிழ்ப் படங்களில் இந்த ஸாம்பியைப் பயன்படுத்தி படங்கள் வந்ததில்லை என்றே சொல்லலாம்.

சரி.. ஸாம்பி என்பது என்ன? மாயமந்திரங்களாலோ அல்லது கிருமிகளாலோ உருவாகும் ஒரு வித தீய சக்தி. மனித சதைகளை வேட்டையாடும் ஒரு கொடூர அமானுஷ்யம். ஒரு இரவில் இந்த ஸாம்பிக்கள் மொத்தமாக ஒரு வணிக வளாகத்திற்குள் நுழைந்து விட்டால் என்ன ஆகும்? அது தான் ‘வேற வழி இல்ல’ படத்தின் கதை.

#TamilSchoolmychoice

‘வெட்டிப்பசங்க’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு வீடு புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படத்தைப் பிரேம்நாத் இயக்கியுள்ளார். எம்.ஜி குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

 நடிப்பு 

டேனிஸ்குமார், ஜாஸ்மின் மைக்கேல், மகின், ஆல்வின் மார்ட்டின், டேவிட் ஆண்டனி, சசிதரன், தமிழகத்தைச் சேர்ந்த சாய் பிரசாந்த், ஜனனி பாலு எனப் பெரிய பட்டாளமே இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

டேனிஸ் தனது இயல்பான நகைச்சுவை நடிப்பாலும், முகபாவனைகளாலும் ஈர்க்கிறார். அவரது வித்தியாசமான ஹேர்ஸ்டைல் பார்ப்பதற்குக் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறது.

மிடுக்காகப் பாதுகாவலர் உடையணிந்து கையில் குச்சியுடன், டேனிஸ் புறப்படும் தோரணை அழகு.

“இது இரத்தமா? இல்லை பெயிண்டா?” என்று டேனிஸ் கேட்க, மகின் ஒரு 500 வெள்ளியை அவரது பாக்கெட்டில் வைக்கிறார். அதற்கு டேனிஸ், “சரி.. சரி.. இது பெயிண்டு தான்.. ஏன் தக்காளி சட்டினின்னு கூட சொல்லுவேன் பாஸ்” என்று கூறும் காட்சி வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கிறது.

ஜாஸ்மின் மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். கிளைமாக்ஸில் அவரது நடிப்பு அருமை. காதல் காட்சிகளில் கோபம், சமாதானம், சிரிப்பு என அனைத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

விளையாட்டுப் பசங்க படத்திற்குப் பிறகு, டேனிஸ், ஜாஸ்மின் கூட்டணி மீண்டும் இணைகின்றது.  என்றாலும், காதலுக்கு அவ்வளவு அழுத்தமான காட்சிகள் இல்லை. திகில் படம் என்பதால் இயக்குநர் காட்சிகளின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

மகினுக்கு இம்முறை வித்தியாசமான கதாபாத்திரம். வட்டிக்குப் பணம் கொடுக்கும் அலோங்காக நடித்திருக்கிறார். கடனைத் திருப்பிக் கொடுக்காத ஒருவரை அடித்துக் கொண்டே, “செல்லக்குட்டி.. இதோ அப்பா கெளம்பிட்டேன்டா.. சீக்கிரம் வந்தர்றேன்..” என்று போனில் மகளைச் சமாதானப்படுத்துவது, ஸாம்பியைக் கண்டு மிரண்டு துப்பாக்கியால் சுடுவது, “மணி.. வேணாண்டா… சுட்டுருவேன்” என்று கண்ணீருடன் கூறுவது என நடிப்பில் அவ்வளவு உயிரோட்டம். நடிக்கும் படங்களில் கடினமான கதாபாத்திரத்தையும் கூட மிக எளிதாகச் செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிடும் மகின் மலேசியக் கலைத்துறைக்கு ஒரு சொத்து என்று தான் கூற வேண்டும்.

அடுத்ததாக, இன்னொரு பாதுகாவலராக நடித்திருக்கும் சசிதரனின் நடிப்பு அருமை. எப்போதும் சீரிஸாக முகத்தை வைத்துக் கொண்டு, “எக்காரணம் கொண்டும் 6 வது மாடிக்குப் போகாதீங்க” என்று அவர் கூறும் வசனங்கள் காட்சிகளுக்கு விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றது.

தமிழக நடிகர் சாய் பிரசாந்தின் நடிப்பைப் பல படங்களில் பார்த்துவிட்டாலும், மலேசியப் படத்தில் முதல் முறையாக நடித்திருப்பது வித்தியாசமாக இருந்தது.

சிங்கமுத்து கதாபாத்திரத்தில், “பைல் பார்க்கலாமா?” என்று உதவியாளரிடம் கொஞ்சுவது தொடங்கி, “என்னங்க அறிவுகெட்டதனமா பேசிக்கிட்டு இருக்கீங்க?” என்று அனைவரையும் எரிந்து விழுவது வரை சிறப்பாக நடித்திருக்கிறார்.

இவர்களைத் தவிர, 1984 கெட்டப்பில் வந்து மிரட்டும் டேவிட் ஆண்டனி, வித்தியாசமான கதாபாத்திரத்தில் டிசினிமா மாராஸ் ரவி, “டைனசருக்கு டயரியா போற மாதிரி” என டைமிங் காமெடியில் கலக்கும் ஆல்வின் மார்டின், “வாவ் வாட் அ பியூட்டிபுல் குக்கூ பேர்ட்” என தப்புத்தப்பாக ‘மம்மி டங்க்’ ஆங்கிலம் பேசியே வயிறு குலுங்கச் சிரிக்கும் வைத்திருக்கும் செண்டோல் வியாபாரி கதாபாத்திரம், குஜுரு குஜுரு சாமியாக ஜனனி பாலு எனக் கவனிக்க வைக்கும் கதாப்பாத்திரங்களும் நடிப்பில் அசத்தியுள்ளனர்.

ஸாம்பிக்களாக நடித்திருக்கும் இளைஞர்கள் அனைவரும் மிகவும் அற்புதமாக நடித்துள்ளனர். ஸாம்பிக்களுக்கு பிள்ளை ஆஸ்பாலனின் மேக்கப் சரியாகப் பொருந்தியுள்ளது.

ஒளிப்பதிவு, பின்னணி இசை மற்றும் பாடல்கள்

எம்ஜி குமாரின் ஒளிப்பதிவு பிரம்மிக்க வைக்கின்றது. அந்த குறிப்பிட்ட வணிக வளாகத்திற்கு நேரில் சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும். பகலில் போனாலே அங்கு பயப்படும் அளவிற்குப் பாழடைந்து இருக்கும். அங்கு முழுக்க முழுக்க இரவில் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

அந்த வகையில், ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது. கார் நிறுத்தும் இடங்கள், லிப்ட், படிக்கட்டுகள், கழிவறை ஆகியவற்றில் நடக்கும் காட்சிகள் மிகச் சிறப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

டேடி ஷேக்கின் பின்னணி இசை உண்மையில் மிரட்டுகிறது. சாமியாரின் அறிமுகம், ஸாம்பிக்கள் உருவாகும் சமயம், அந்தக் கட்டிடத்தைக் காட்டும் இடங்கள் ஆகியவற்றில் பின்னணி இசை சூப்பர்.

மணி வில்லன்ஸ் வரிகளில், சாஸ்தன், கே.பத்மா குரல்களில் ‘அன்பே நீ போதும்’ பாடலும், டேடி ஷேக், சைக்கோ மந்த்ரா, ஸ்டைலோ மன்னவன், குயின் குரல்களில், ‘வேற வழி இல்ல’ பாடலும் உலகத் தரம்.

திரைக்கதை, படத்தொகுப்பு

1984-ம் ஆண்டு பிளாஷ்பேக்குடன் கார்ட்டூனில் தொடங்கும் படம், அப்படியே 1996-க்கு சென்று, இறுதியில் நிகழ்காலம் வரை குழப்பமின்றி காட்டிய விதத்தில் ஒரு இயக்குநராகவும், படத்தொகுப்பாளராகவும் பிரேம்நாத் பாராட்டுகளைப் பெறுகின்றார்.

ஃபிளாஷ்பேக்கில் தெளிவான தமிழில் கதை சொல்லும் ஒரு கணீர்க் குரலை எங்கோ கேட்டது போல் இருக்கிறதே என்று யோசித்தால், அட.. நம்ம நடிகர் ஹரிதாஸ் குரல் கொடுத்திருக்கிறார்.

இது தவிர, உச்சக்கட்ட பூஜையில் வானில் இருந்து அமானுஷ்யம் தோன்றும் இடங்களும், ஸாம்பிக்களாக நடித்தவர்களும் உண்மையில் பயமுறுத்திவிட்டனர்.

மனித வேட்டையாடும் ஸாம்பிக்களைக் காட்டி, ரசிகர்களைப் பயத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்ற திரைக்கதையில், திடீரெனக் காமெடிக்காகச் சேர்க்கப்பட்ட ஸாம்பியுடன் ‘செல்ஃபி’ காட்சிகள் வேகத்தைக் குறைத்து ஸாம்பி மீது இருந்த பயத்தைக் குறைத்துவிட்டது. தொடக்கத்தில் இருந்து இறுதி வரை ஸாம்பிக்களை அப்படியே மிரட்டலுடன் காட்டியிருக்கலாம் என்று தோன்றுகிறது.

என்றாலும், புதிய கதையம்சத்துடன், தமிழில் அதுவும் குறிப்பாக மலேசியாவில் எடுக்கப்பட்டிருக்கும் ‘வேற வழி இல்ல’ திரைப்படம் நிச்சயமாகத் திரையரங்கிற்குச் சென்று பார்த்து ரசிக்க வேண்டிய முக்கியமான மலேசியப் படங்களில் ஒன்று.

வரும் ஜூலை 2-ம் தேதி முதல், மலேசியாவில் 27-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளிவரவிருக்கும் இத்திரைப்படத்தைக் காணத்தவறாதீர்கள்.

– ஃபீனிக்ஸ்தாசன்