கோலாலம்பூர், ஜூன் 27 – டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் மத்திய அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் தெரிவித்துள்ளார்.
மஇகா கட்சி விவகாரங்கள் அனைத்தும் அக்கட்சிக்குள்ளேயே பேசித் தீர்க்கப்பட வேண்டும் என்றும், வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.
“மஇகா விவகாரத்தைப் பொருத்தவரை வேறு வழி இல்லை. சங்கப் பதிவகத்தின் முடிவை உறுதி செய்துள்ள நீதிமன்றத்தின் முடிவை நான் ஏற்பேன். பழனிவேல் அமைச்சர் பதவி வகிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும். தற்போதைய நிலையில் மஇகாவின் தலைமைத்துவம் குறித்து அவர்கள் தீர்மானிக்க வேண்டும். அரசாங்கத் தலைவர் என்ற முறையில் எனக்குத் தனிப்பட்ட விருப்பு வெறுப்பு இல்லை” என்று பிரதமர் நஜிப் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த வியாழக்கிழமை வெளியிடப்பட்ட சங்கப் பதிவக கடிதத்தில், மஇகா அரசியல் சாசன விதி 91ன் கீழ் அமைச்சர் பழனிவேல் மஇகா கட்சி உறுப்பியத்தை இழந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் தாம் மஇகா தேசியத் தலைவராக இன்னும் நீடிப்பதாகப் பழனிவேல் அறிவித்துள்ளார். மேலும் சங்கப்பதிவகக் கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
இத்தகைய சூழ்நிலையில் பிரதமரின் இந்த முக்கியமான அறிவிப்பும் வெளியாகி உள்ளது.