Home நாடு “சட்டவிதி 91ஐ அர்த்தப்படுத்தும் அதிகாரம் சங்கப் பதிவிலாகாவுக்கு இல்லை” – பழனிவேல் கூறுகின்றார்!

“சட்டவிதி 91ஐ அர்த்தப்படுத்தும் அதிகாரம் சங்கப் பதிவிலாகாவுக்கு இல்லை” – பழனிவேல் கூறுகின்றார்!

511
0
SHARE
Ad

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 26 – மஇகா அரசியல் சாசன சட்ட விதி 91 தொடர்பில் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கட்சி உறுப்பினர்களையும் பொது மக்களையும் தவறாக வழிநடத்துவதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

மஇகா தலைவராகத் தாம் இன்னும் நீடிப்பதாகவும், இதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

zul_palanivel_c57783_11622_307_v06“எனது 18ஆவது வயது முதல் மஇகா உறுப்பினராக இருந்து வருகிறேன். எனவே நான் மஇகா உறுப்பியத்தை இழந்துவிட்டதாகத் தன்னிச்சையாகவும் சட்டத்திற்குப் புறம்பாகவும் டாக்டர் சுப்ரா அறிவித்திருப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். சங்கப்பதிவகம் அனுப்பியுள்ள கடிதத்தின் சாராம்சங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஜூன் 17ஆம் தேதி சுப்ரா தரப்பினர் அனுப்பிய கடிதத்தில் உள்ள தவறான சாராம்சங்களை மட்டுமே சங்கப்பதிவகம் குறிப்பிட்டுள்ளது. 91ஆவது சட்ட விதியை அமல்படுத்துவது குறித்துச் சங்கப் பதிவகம் தாமாக எந்த முடிவுக்கும் வரவில்லை. மஇகா அரசியல் சாசனத்தில் தலையிட எந்தவிதச் சட்டப்பூர்வ அனுமதியும் இல்லை என்பது சங்கப்பதிவகத்துக்குத் தெரியும்” என்றும் இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் பழனிவேல் விளக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

“சங்கப் பதிவகம் 91ஆவது சட்ட விதி தொடர்பில் சட்டவிரோதமாகச் செயல்படாத நிலையில், சங்கப் பதிவகம் அவ்வாறு செயல்பட்டதது போன்ற தோற்றத்தைச் சுப்ரா தரப்பு ஏற்படுத்தியுள்ளது,” என்று பழனிவேல் கூறியுள்ளார்.

எனினும் சுப்ரா தரப்பினர் அனுப்பிய கடிதத்தைச் சங்கப் பதிவகம் தன்னிச்சையாக ஏற்றிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், ஜூன் 16ஆம் தேதியே தாம் சங்கப்பதிவகத்திற்குக் கடிதம் எழுதியதாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஜூன் 25ஆம் தேதியன்று 2009 மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்று உள்ளது என்றும் அச்சமயம் உரிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள பழனிவேல், மற்ற கூட்டங்கள் எதுவும் சட்டப்படி நடந்தவை அல்ல என்று கூறியுள்ளார்.

“டாக்டர் சுப்ரா நடத்தியுள்ள கூட்டங்கள் மஇகா அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்பதால் அவை செல்லுபடி ஆகாது. சங்கப்பதிவகத்திற்கு இது தெரியபடுத்தப்படும். சங்கப்பதிவகம் உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்” என்றும் பழனிவேல் நம்பிக்கை தெரவித்துள்ளார்.

“எனது தனிப்பட்ட மற்றும் 4 மஇகா உறுப்பினர்களின் நலன் கருதியும், கட்சியின் நலன் கருதியும் டாக்டர் சுப்ரா மீதும், தேவைப்பட்டால் சங்கப்பதிவகம் மீதும் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன். அத்தகைய நிலைக்கு நான் தள்ளப்பட மாட்டேன் என நம்புகிறேன். மஇகா உள்விவகாரங்களில் மூன்றாம் தரப்பினர் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்க மாட்டேன். சுப்ரா தரப்பினர் தங்களது சுய லாபங்களுக்காக மஇகா விவகாரங்களை மூன்றாம் தரப்பினரது பகடைக் காய்களாக மாற்றும் செயலையும் நான் அனுமதிக்க மாட்டேன்,” என்று பழனிவேல் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

தற்போதைய நிலை காரணமாக மஇகாவினர் மனமுடைந்துவிடக் கூடாது என்று குறிப்பிட்டுள்ள அவர், சுப்ரா தரப்பினரின் சட்ட விரோதச் செயல்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் மேற்கொண்டு வருவதாகக் கூறியுள்ளார்.