Home கலை உலகம் திரைவிமர்சனம் : “காவல்” –கூலிப்படை, காவல் துறை இடையிலான விறுவிறுப்பு மோதல்

திரைவிமர்சனம் : “காவல்” –கூலிப்படை, காவல் துறை இடையிலான விறுவிறுப்பு மோதல்

943
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 26 – நமது நாட்டின் டிஎச்ஆர் வானொலி புகழ் புன்னகைப் பூ கீதாவை கதாநாயகியாகக் கொண்டு வெளிவந்திருக்கும் படம் “காவல்”.

Kaval-movie-poster-படம் இறுதிவரை விறுவிறுப்பான திரைக்கதையோடு பயணித்தாலும், அதே காவல் துறை-குண்டர் கும்பல் இடையிலான மோதல்கள், மிரட்டல்கள், விரட்டல்கள் என பல படங்களில் ஏற்கனவே பார்த்த அதே கதைப் பாணியை இயக்குநர் மீண்டும் கையாண்டிருக்கின்றார்.

சம்பவங்களிலும் புதுமையோ, வித்தியாசமோ காட்ட இயக்குநர் வி.ஆர்.நாகேந்திரன் முயற்சி எதனையும் செய்யவில்லை.

#TamilSchoolmychoice

கதை-திரைக்கதை

காவல் துறை பணியாளர்களின் குடியிருப்பு. அங்கு ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் துறை பணியாளர்களிடையே புரையோடிக் கிடக்கும் இலஞ்ச ஊழல். தறுதலைகளாகத் திரியும் அவர்களின் இளவயதுப் பிள்ளைகள். இப்படியாகத் தொடங்கும் படம், இடையில் சமுத்திரகனி பாத்திரம் நுழைந்ததும், சூடுபிடித்துக் கொண்டு எகிறியடிக்கின்றது.

Kaval-Poster-Vimal-Geethaமெரினா கடற்கரையில் சாதாரண பலூன் விற்பவராக நுழையும் சமுத்திரகனிதான், இன்ஸ்பெக்டர் சேகர் – அதிலும் குண்டர் கும்பல்களைப் போட்டுத் தள்ளும் எண்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் – என கதை திசை திரும்பும்போது, நாமும் நிமிர்ந்து உட்கார்ந்து விடுகின்றோம்.

கூலிப் படைக் கொலைகாரனாக ஆள்வைத்து கொலை செய்யும் கர்ணா என்ற குண்டர் கும்பல் தலைவனைக் குறிவைத்து சமுத்திரகனி செயல்பட, அந்த கர்ணாவோடு, காவல்துறையைச் சேர்ந்தவர்கள் பணம் வாங்கிக் கொண்டு இணைந்து செயல்பட, அந்த காவல் துறை பணியாளர்களின் தறுதலை மகன்களும் கர்ணாவோடு சேர்ந்து கொள்ள, பரபரப்பாக நகர்கின்றது கதை.

கர்ணாவைக் கொல்லும் முயற்சியில் சமுத்திரகனி தனது இளம் காவல் துறை அதிகாரியை பலி கொடுக்கின்றார்.

கர்ணாவை பதிலுக்குச் சுட்டுக் கொல்ல சமுத்திரகனி குழு முற்பட அந்த இரகசியம் தெரிந்து கர்ணா தப்பிவிடுகின்றார். ஆனால், அவரது தம்பி கொல்லப்பட அதற்குப் பழிக்குப் பழி வாங்க கர்ணா அதிரடியாக இறங்க, அதனை தடுக்க சமுத்திரகனி செய்யும் முயற்சிகள்தான் மீதிக் கதை.

மேல்பூச்சுக்காக விமல்- கீதா

விமல் கதாநாயகன், கீதா கதாநாயகி என்றாலும் இருவருக்கும் அதிகம் வேலையில்லை. விமல் விளையாட்டுப் பிள்ளையாக இடையிடையே வந்து போகின்றார். வழக்கம்போல அதே நடிப்பு, அதே முகபாவம்.

Kaval - Movie - poster - Vimal - Geetha

மலேசியாவில் இருந்து போன நடிகைகளில் தனிக் கதாநாயகியாக ஒருவர் ஒரு தமிழ்ப்படத்தில் நடிப்பது இதுதான் முதல் முறை என நினைக்கின்றோம். அதற்காக நிச்சயம் கீதாவைப் பாராட்டலாம். ஆனால், நடிப்பதற்கு அதிக வாய்ப்பில்லை. வெறும் பொம்மைக் கதாநாயகிப் பாத்திரம். அவ்வப்போது வந்து போகின்றார். இறுதிக் காட்சிகளில் மட்டும் நன்றாக ஓடவிட்டிருக்கின்றார்கள்.

இனிமையான குரல் கொண்ட கீதா ஏனோ, பின்னணி பேசும்போது இன்னும் கொஞ்சம் கூடுதலாக சிரத்தை எடுத்திருக்கலாம். கண்ணை மூடிக் கொண்டு கேட்டால், அவர் எழுதி வைத்ததை அப்படியே ஒப்பித்துப் படித்ததைப் போல் இருக்கின்றது.

படத்தைத் தூக்கி நிறுத்தும் சமுத்திரகனி

துணைக் கதாபாத்திரம் என்றாலும், படம் முழுக்க வியாபித்து, படத்தைத் தூக்கி நிறுத்துபவர் சமுத்திரகனிதான்.

பலூன்காரராக வில்லனிடம் பவ்யம் காட்டுவது, பின்னர் தினவெடுத்த தோள்களுடன் இன்ஸ்பெக்டராக நிமிர்ந்து உலா வருவது, அவ்வப்போது கூர்மையான கருத்துக்களை உதிர்ப்பது, காவல் துறையின் பெருமைகள் குறித்து சக காவல் துறையினருக்கும், படம் பார்ப்பவர்களுக்கும் அடிக்கடி பிரச்சாரம் செய்வது என வெளுத்து வாங்கியிருக்கின்றார்.

படம் முடிந்து வெளிவரும்போது, சமுத்திரகனிதான் கதாநாயகன் என்ற நினைப்புடனே வெளியே வருகின்றோம். அந்த அளவுக்கு கடுமையாக உழைத்துப் படத்தைத் தூக்கி நிறுத்தியிருக்கின்றார்.

Kaval-Song-Vimal-Danceபடத்தில் கலகலப்பூட்டும் மற்றொரு கதாபாத்திரம் நமோ நாராயணன். காவல் நிலையத்திற்கு முன்பாகவே, டீக்கடை வைத்து, காவல் நிலையத்தில் மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்து வைக்கின்றார்.

வசனங்கள் கூர்மை

குறிப்பிடத்தக்க வேண்டிய மற்றொரு சிறப்பு அம்சம் படத்தில் இடம் பெற்றுள்ள கூர்மையான வசனங்கள். அதிலும் அவை சமுத்திரகனி வாயிலாக அனல் வேகத்தில் புறப்படும் வகையில் நம்மைக் கவர்கின்றன.

இசை ஜி.வி.பிரகாஷ். ஆனாலும் பாடல்கள் எதுவும் ரசிக்கவில்லை.

படம் முழுக்க வரும் சம்பவங்கள் ஏதாவது ஒரு படத்தில் இருந்து சுட்டது போலவே தெரிகின்றன. எத்தனையோ படங்களில் பார்த்த அதே அரசியல் கொலை செய்யும் கூலிப்படை, இலஞ்சம் வாங்கும் காவல் துறை, தறுதலைப் பிள்ளைகள் என படம் நகர்ந்தாலும், போரடிக்காமல் இறுதிவரை திரைக்கதை அமைத்திருப்பதால், அந்த விறுவிறுப்புக்காக தயங்காமல் ஒருமுறை ‘காவல்’ பார்த்து வைக்கலாம்.

-இரா.முத்தரசன்