Home நாடு சோதிநாதனின் தொகுதித் தலைவரும் – கிளைகளும் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்!

சோதிநாதனின் தொகுதித் தலைவரும் – கிளைகளும் சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்தனர்!

666
0
SHARE
Ad

போர்ட்டிக்சன், ஜூலை 5 – நடந்து கொண்டிருக்கும் மஇகா கட்சியின் தலைமைத்துவப் போராட்டத்தில் இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா தரப்பை ஆதரிப்பதாக டத்தோ சோதிநாதனின் கிளை சார்ந்துள்ள தெலுக்கெமாங் தொகுதியின் தலைவரான டத்தோ பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

sothi2இதனால் சோதிநாதன் மற்றும் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்புக்குப் பலத்த பின்னடைவு ஏற்பட்டிருப்பதாக அரசியல் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

தெலுக்கெமாங் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராகவும்  சோதிநாதன் முன்பு இருந்துள்ளார். 2008 பொதுத் தேர்தலில் அவர் தெலுக் கெமாங் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

#TamilSchoolmychoice

“மஇகாவில் நிலவி வரும் நெருக்கடிகள் குறித்து தெலுக்கெமாங் தொகுதி மஇகா தலைவர் என்ற முறையில் அனைத்தையும் இதுநாள் வரை கூர்ந்து கவனித்து வந்தேன். எனினும் எத்தரப்புக்கும் எனது ஆதரவைத் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தற்போது நீதிமன்றங்களும், சங்கப் பதிவகமும் பிறப்பித்துள்ள உத்தரவுகள் தெளிவாக இருப்பதால், டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்துக்கு எங்களது பிளவுபடாத ஆதரவைத் தெரிவிக்கிறோம்,” என அறிக்கை ஒன்றில் டத்தோ பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

MIC logoடத்தோஸ்ரீ பழனிவேல் மற்றும் சோதிநாதனின் தீவிர ஆதரவாளராகக் கருதப்பட்டவர் பாலகிருஷ்ணன். இந்நிலையில் அவரது இந்த அறிவிப்பு பழனிவேல் தரப்புக்குப் பலத்த அடியாக விழுந்துள்ளது என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

“எனது நடவடிக்கைகள் சட்டப்படியும் மஇகா அரசியல் சாசனப்படியும் சரியாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். தெலுக்கெமாங் தொகுதி மற்றும் கட்சி நலன் சார்ந்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றும் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

“டத்தோஸ்ரீ பழனிவேல் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன், சங்கப்பதிவக உத்தரவு சரியானது என்றும் கூறியுள்ளது. எனவே எனது தொகுதியின் கீழ் உள்ள அனைத்துக் கிளைத் தலைவர்களும் நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

தெலுக்கெமாங்கில் 74 கிளைகள் உள்ளன

“எங்கள் தொகுதியில் சிறிய அளவிலான கிளைகள் இன்னும் உணர்ச்சி வேகத்தில் டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும், 90 விழுக்காடுக் கிளைகள், டாக்டர் சுப்ரா தலைமையில் செயல்படும் 2009 மத்தியச் செயலவையின் உத்தரவுப்படி ஜூலை 10ஆம் தேதி தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யும்” என்றும் பாலகிருஷ்ணன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Palanivel MIC President“மஇகாவின் அனைத்துக் கிளைத் தலைவர்களும் 2009 இடைக்கால மத்தியச் செயலவையின் உத்தரவுக்கேற்ப வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்,” என டத்தோ பாலகிருஷ்ணன் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

74 கிளைகளுடன் மஇகாவின் மிகப் பெரிய தொகுதிகளுள் ஒன்றாகத் திகழும் சோதிநாதனின் சொந்தத் தொகுதியான தெலுக் கெமாங், சுப்ராவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பதும், அதிலும் 90 சதவீத கிளைகள் வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெற முன்வந்திருப்பதும் பழனிவேல்-சோதிநாதன் தரப்புக்கு அரசியல் ரீதியாகப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகின்றது.

நீதிமன்றத் தீர்ப்பு – அதைத் தொடர்ந்து சங்கப் பதிவகம் சுப்ராவை இடைக்காலத் தேசியத் தலைவராக அங்கீகரித்தது – ஆகிய காரணங்களால் பழனிவேல் ஆதரவுக் கிளைகளும், கட்சியின் நடுநிலையாளர்களும் கட்டம் கட்டமாக, டாக்டர் சுப்ரா தரப்புக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பதாகவும், அதில் ஓர் உதாரணம்தான் தெலுக் கெமாங் தொகுதித் தலைவர் பாலகிருஷ்ணனின் நிலைப்பாடு என்றும் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.