துர்க்மெனிஸ்தான், ஜூலை 11- ஆறு நாடுகள் சுற்றுப்பயணத்தின் தொடர்ச்சியாக இன்று துர்க்மெனிஸ்தான் சென்ற மோடி, அந்நாட்டு அதிபர் குர்பங்குலியைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு ஒத்துழைப்பு, போதைப்பொருள் கடத்தல் தடுப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களில் 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இந்தச் சந்திப்பின்போது, ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ இருநாடுகளும் உதவுவது என மோடியும் குர்பங்குலியும் உறுதி எடுத்துக் கொண்டனர்.
மேலும், TAPI எனப்படும் துர்க்மெனிஸ்தான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா நாடுகளுக்கு இடையேயான எரிவாயுக்குழாய்த் திட்டம் குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
1800 கிலோமீட்டர் தூரமுடைய எரிவாயுக்குழாய் இணைப்புத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு துர்க்மெனிஸ்தான் அரசைப் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.
இப்பயணத்தின் சிறப்பு அம்சமாக அஷ்காபத் நகரில் மகாத்மா காந்தியின் சிலையைப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.