புதுடெல்லி, ஜூலை 13- காலதாமதத்தைத் தவிர்ப்பதற்காகக் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) பெறுவதற்கான நடைமுறையில் அதிரடி மாற்றம் வருகிறது.
பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான காவல்துறை விசாரணையை இணையத்தின்(ஆன்லைன்) மூலமாக நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தற்போது பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் குற்றப் பின்னணி குறித்து உள்ளூர்க் காவல் நிலையங்கள் மூலமாக விசாரணை நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.
இதனால் பாஸ்போர்ட் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதாகப் பரவலாகப் புகார் எழுந்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும் வகையில் இணையதளம் மூலம் காவல்துறை விசாரணை நடத்தலாம் என மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
பாஸ்போர்ட் பெற விண்ணப்பிப்பவர்களின் விவரங்கள் தேசிய மக்கள் தொகைப் பதிவகம், ஆதார் அட்டை எண் ஆகியன மூலம் குற்றப்பதிவியல் இணையம் வாயிலாகச் சரி பார்க்கப்படும்.
இதற்கான வசதி அனைத்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர்களுக்கும் வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாவட்டக் காவல் அலுவலகங்களைத் தேசியக் குற்றப் பதிவியல் காப்பகத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட்டு, நவம்பர் மாதம் முதல் ஆன்லைன் போலீஸ் விசாரணை முறை அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த அதிரடி மாற்றத்தால் தற்போது சுமார் ஒரு மாத காலம் வரை எடுத்துக் கொள்ளப்படும் காவல்துறை விசாரணை, ஒரு வார காலத்திற்குள் முடிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்குப் பாஸ்போர்ட் விரைவில் வழங்கப்படும்.