Home இந்தியா சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமையுமா? டெல்லி உச்சநீதிமன்றம் இன்று தெரிவிக்கும்!

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமையுமா? டெல்லி உச்சநீதிமன்றம் இன்று தெரிவிக்கும்!

675
0
SHARE
Ad

supreme-court-of-india1புதுடில்லி, ஜூலை 13- சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்கக் கோரும் வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.

உச்சநீதிமன்றம் வடக்கிலுள்ள டெல்லியில் அமைந்து இருப்பதால், நாட்டின் கிழக்கு, மேற்கு, மற்றும் தெற்கு போன்ற தொலைதூரப் பகுதிகளில் உள்ள மக்கள் உச்சநீதிமன்றத்தை அணுகுவது மிகவும் சிரமமாக உள்ளது. இதனால் உச்சநீதிமன்றத்தின் கிளையைச் சென்னையில் அமைக்க வேண்டும் என வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பாக மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆராய்ந்த சட்டத்துறை ‘சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்கலாம்’ எனப் பரிந்துரை செய்துள்ளது. அதேபோல் நாடாளுமன்றக் குழுவும் இதற்கான ஒப்புதலை வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் ‘சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி ஏ.எம்.கிருஷ்ணா என்பவர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொது நல மனு, தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் அமிதவ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

பொதுநல மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

நாட்டு மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பது அரசியல் அமைப்புச் சட்டம் நமக்கு வழங்கிய முக்கியமான மனித உரிமைகளில் ஒன்று. அரசியல் அமைப்பு சட்டத்தின் 19 – ஏ பிரிவில் அது தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் லட்சக்கணக்கான வழக்குகள் நிலுவையில் உள்ளன; நீதிபதிகளுக்கு வேலைப்பளு அதிகரித்துள்ளது.

நம்மைப் போன்ற மக்களாட்சி நாடுகளில், நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் முடங்கியுள்ளன என்பதற்காக நீதி கோருபவர்களுக்கு நீதியை மறுக்க முடியாது. வழக்குகள் அதிகரிக்கும் அளவுக்கு நீதிமன்றங்களும் பெருக வேண்டும்.

உச்சநீதிமன்றம் டில்லியில் அமைந்திருப்பதால் தமிழகம், கேரளா, அசாம் போன்ற துார மாநிலங்களில் உள்ளவர்களால் உச்சநீதிமன்றத்தை எளிதாக அணுக முடியவில்லை. போக்குவரத்துச் செலவும் அதிகம்; தங்கும் வசதியைப் பார்க்க வேண்டும்; மொழிப் பிரச்னை போன்ற பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியுள்ளது.

நாட்டின் தெற்குப் பகுதியில் தமிழகத்திலும் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும் உச்சநீதிமன்றக் கிளைகளை அமைக்க வேண்டும். நிதி நிலைமை உச்சநீதிமன்றத்தின் கட்டமைப்புப் போன்றவற்றின் அடிப்படையில் கிளைகள் துவக்கப்பட வேண்டியது அவசியம்.

இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் சாதகமான உத்தரவைப் பிறப்பிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

சென்னையில் உச்சநீதிமன்றக் கிளை அமைந்தால் தென் மாநிலங்கள் அனைத்திற்கும் அதிகப் பலன்கள் கிடைக்கும் என்பதுஉறுதி.