சென்னை, ஜூலை 16- சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மீதான விசாரணை வரும் 24 -ம் தேதி நடைபெறும் எனத் தெரிகிறது.
சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
கர்நாடகா தாக்கல் செய்த மனுவில் 1,223 மற்றும் 1,453 வது பக்கங்கள் வெற்றுத் தாள்களாக இருந்ததாகவும், அசல் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் உச்சநீதிமன்ற பதிவாளர் தெரிவித்திருந்தார்.
மேலும், முதல் தகவல் அறிக்கையின் படிவம் தாக்கல் செய்யப்படவில்லை என்றும், தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சில ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
உச்ச நீதிமன்றப் பதிவாளர் குறிப்பிட்டிருந்த பத்து குறைபாடுகளையும் சரி செய்து கர்நாடக அரசு வழக்கறிஞர் ஜோசப் அரிஸ்டாட்டில் கடந்த வாரம் மீண்டும் மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக அரசின் திருத்தப்பட்ட இந்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. இம்மனு வழக்குப் பட்டியலில் இடம் பெற்றதையடுத்து, வரும் 24-ம் தேதி விசாரணை நடைபெறும் எனத் தெரிகிறது.