சென்னை, ஜூலை 22- நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட வலியுறுத்தி, சிவாஜி சமூக நலப் பேரவை சார்பில் நேற்று சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்குப் பேரவையின் தலைவர் கே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.
இதில் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் திருநாவுக்கரசர், தமிழகக் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பீம்ராவ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், நடிகர் பூச்சி முருகன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றுப் பேசினார்கள்.
தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:–
“சுதந்திரப் போராட்ட வீரர்களை நாம் பார்த்ததில்லை. ஆனால் அவர்களை நடிப்பின் மூலம் நம் கண் முன்னால் நிறுத்தியவர் சிவாஜிகணேசன். தன்னுடைய நடிப்புத் திறமையால் தமிழக மக்களைக் கட்டிப்போட்ட அவருக்கு மணிமண்டபம் கட்டாதது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அவமானம் ஆகும்.
காமராஜரை எப்படி எந்தக் கட்சிக்குள்ளும் அடக்க முடியாதோ, அதுபோலத்தான் சிவாஜியையும் எந்தக் கட்சிக்குள்ளும் அடக்க முடியாது. அவர் தமிழக மக்கள் அனைவருக்கும் பொதுப்படையானவர். சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்குத் தமிழக அரசு எதற்காகத் தயக்கம் காட்டுகிறது என்று தெரியவில்லை.
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்காகச் சிவாஜி சமூகநலப் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்குத் தமிழகப் பாரதிய ஜனதா கட்சி இறுதிவரை உறுதுணையாக இருக்கும்”
அடுத்துப் பேசிய திருநாவுக்கரசர், ‘‘நடிகர் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவது உறுதி. மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்காமல் தமிழக அரசே கட்டி முடிக்க வேண்டும்’’ என்றார்.
மார்க்சிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் பீமாராவ், ‘‘சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் எனச் சட்டப்பேரவையில் வலியுறுத்துவோம். இதற்காக ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வருவோம்’’ என்றார்.
திமுகவைச் சேர்ந்த பூச்சிமுருகன், ‘‘இன்னும் மூன்று மாதங்களில் நடிகர் சங்கத் தேர்தல் நடக்கும். அதில் நடிகர் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெறும். அதன் பிறகு சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டப்படும்’’ என்றார்.
இவர்களோடு மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களும், ரசிகர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்றனர்.