சென்னை,ஜூலை 22- திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று கலைஞர் கருணாநிதி அறிவித்திருப்பதற்குத் தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவும் எதிர்ப்பும் மாறிமாறிக் கிளம்பியுள்ளது.
மது விலக்கை ரத்து செய்தவரே கருணாநிதி தான்- ராமதாஸ்:
திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் எனக் கருணாநிதி அறிவித்துள்ளார். அவரது அறிக்கையைப் படிக்கும்போது அதன் ஒவ்வொரு வரியும் பாவ மன்னிப்புக் கோருபவரின் மனதிலிருந்து எழும் வார்த்தைகளாகவே உள்ளன. 1971-ல் மது விலக்கை ரத்து செய்ததன் மூலம் மது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையை மதுவலையில் வீழ்த்தி சிதைத்தவர் கருணாநிதி.
அடுத்த 8 மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் வர இருப்பதால் அவருக்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகளிடம் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.
ஒரு தலைமுறையைக் குடிக்க வைத்தவர் கருணாநிதி-தமிழிசை சவுந்தரராஜன்:
மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்ற கருணாநிதியின் அறிவிப்பை மதிக்கிறோம். ஆனால், திடீரென அவர் இதை சொல்லியிருப் பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஒருதலைமுறையைக் குடிக்க வைத்ததில் கருணாநிதிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.
மதுவிலக்குக்கு ஆதரவாக ஓரணியில் திரள்வோம்-திருமாவளவன்:
ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற கருணாநிதி யின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அனைத்துக் கட்சிகளும் மதுவிலக்குக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டுள்ளன. வறுமையில் வாடும் மக்களின் உழைப்பைச் சுரண்டுவதாக மதுக்கடைகள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும்
26000 கோடியை ஈடு செய்வது எப்படி? -பழ.நெடுமாறன்:
கொட்டும் மழையில் கருணாநிதியின் வீடு தேடிச் சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என ராஜாஜி கேட்டுக் கொண்டார். ஏழை, எளிய மக்களின் வாழ்வு சீர்குலைந்து போகும் எனக் கண்ணீர் மல்கினார். ஆனாலும் மதுக்கடைகளைக் கருணாநிதி திறந்தார். அதனால், சில தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த விரும்பினால், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ரூ.26 ஆயிரம் கோடியை எப்படி ஈடுசெய்வது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
தேர்தலை மனதில் வைத்து வெளியிடும் அறிவிப்பு- ஜி.ராமகிருஷ்ணன்:
மது அடிமைத்தனத்தால் பொருளாதார இழப்பு, உடல் பாதிப்பு, உளவியல் பாதிப்புகளால் ஏழை குடும்பங்கள் துன்புறுகின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் என நிபந்தனையுடன் சொல்வது தேர்தலை மனதில் வைத்துதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எப்படியிருப்பினும் மதுவை ஒழிப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும். எனவே, மதுவுக்கு எதிராக மனிதநேயமுள்ள அனைவரும் குரல் எழுப்புவோம்.
பூரண மதுவிலக்கை அமல்படுத்த ஒத்துழைப்போம்- ஜி.கே.வாசன்:
மது இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே தமாகாவின் பிரதான கொள்கை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக திமுகவும் மது விலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.