Home அவசியம் படிக்க வேண்டியவை உலக நாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்!

உலக நாயகனுக்கு மகுடம் சூட்டிய மலேசியக் கலைஞரின் பாடல்!

1435
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 23 – மலேசியாவில் எத்தனையோ விழாக்களில் உலகநாயகன் கமல்ஹாசனின் பாடல்கள் ஒலிப்பதைக் கேட்கிறோம். ஆனால் உலகநாயகனே நடந்து வர அவருக்குப் பின்னணி இசையாக ஒலித்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது மலேசிய இசையமைப்பாளர் பாலன்ராஜ் உருவாக்கிய “உலகநாயகன்” பாடல்.

Untitled

(இடமிருந்து: பாலன்ராஜ், ஜெகதீஸ், மிஸ்டா கேரி, ஹஸ்மிதா செல்வம்)

#TamilSchoolmychoice

அண்மையில், தமிழகத்தின் முன்னணித் தொலைக்காட்சியான சன்டிவியில் நடத்தப்பட்ட ‘பாபநாசம்’ திரைப்படம் குறித்த கமலின் சிறப்பு நேர்காணலில், அவரை வரவேற்க அழகான நடனத்துடன், பாலன்ராஜ் உருவாக்கிய அந்தப் பாடல் ஒலிபரப்பப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, நவம்பர் 7-ம் தேதி, உலக நாயகன் கமல்ஹாசனின் 60 -வது பிறந்தநாளையொட்டி, அவரது சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, சக இசையமைப்பாளர் ஜெகதீஸுடன் இணைந்து பாடல் ஒன்றை உருவாக்கினார் பாலன்ராஜ்.

அந்தப் பாடலில், உலகநாயகனின் முதல் படமான ‘களத்தூர் கண்ணம்மா’ தொடங்கி சினிமாவில் அவர் கடந்து வந்த பாதைகளைப் பெருமைப்படுத்தும் படியான பாடல் வரிகள் எழுதியுள்ள பாலன்ராஜ், அப்பாடலைத் தயாரித்ததோடு, தனது குழுவினரான ஜெகதீஸ், ஹஸ்மிதா செல்வம், மிஸ்டா கேரி ஆகியோருடன் சேர்ந்து பாடியும் உள்ளார்.

யூடியூபில் வெளியிடப்பட்ட அந்தப் பாடல் உலக அளவில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. அதைப் பற்றிய செய்தி கடந்த ஆண்டே செல்லியலில் வெளியிடப்பட்டது.

Balanrajநடிகர் கமல்ஹாசனின் தீவிர ரசிகரான பாலன்ராஜ், மலேசியாவிலுள்ள கமல்ஹாசன் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக உள்ளார்.

இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் கோலாலம்பூரில் நடைபெற்ற சீகா விருது விழாவின் போது, ரசிகர் மன்றம் மூலமாக கமல்ஹாசனை நேரில் சந்தித்த பாலன்ராஜ் தனது பாடல் அடங்கிய குறுந்தட்டை நேரடையாகவும் அவரிடம் வழங்கினார்.

Balanraj 1

இந்நிலையில், சன் டிவியில், கடந்த ஜூன் 28-ம் தேதி, கமல்ஹாசன் பங்குபெற்ற ‘பாபநாசம்’ சிறப்பு முன்னோட்டத்தைக் கண்ட பாலன்ராஜுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. ஆம்.. கமலஹாசனை வரவேற்பதற்காக ‘உலகநாயகன்’ என்று தொடங்கும் அந்தப் பாடல் பயன்படுத்தப்பட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.

Kamalhassan

உலகநாயகனை வரவேற்று அவருக்கு மகுடம் சூட்டும் விதமாக அமைந்த அந்தப் பாடல் மலேசியக் கலைஞர்களால் உருவாக்கப்பட்டது என்பது நமக்கு பெருமைக்குரிய விசயம்..

மலேசியக் கலைஞர்களின் திறமைகள் அனைத்துலக அளவில் பரவி வரும் இவ்வேளையில், இது போன்ற மகிழ்ச்சிகளையும், பெருமைகளையும் தொடர்ந்து நாம் எதிர்பார்க்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

செல்லியலின் வாழ்த்துகள் பாலன்ராஜ், ஜெகதீஸ், ஹஸ்மிதா செல்வம், மிஸ்டா கேரி மற்றும் ஆப்ரஹாம் ஸ்டூடியோஸ் பாய் ராஜ் (பாடல் பதிவு மற்றும் இசைக் கலவை).

– ஃபீனிக்ஸ்தாசன் 

குறிப்பிட்ட அந்தப் பாடலைக் கீழ் காணும் சன் டிவியின் அதிகாரப்பூர்வ யூடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்:

 https://www.youtube.com/watch?v=L_TT8DjrA6Y