கோலாலம்பூர், ஜூன் 24 – புக்கிட் ஹடாமாஸ் நீர்நிலைப் பகுதியில் இலைகளின் மீது காணப்பட்ட ரத்தக்கறை மாயமான மலையேற்ற வீரர் டியோ கிம் லியன் எனப்படும் ஆய்லியின் ரத்தத்தால் ஏற்பட்டதல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
புக்கிட் ஹடாமாஸ் பகுதியில் மாயமான மலையேற்ற வீரர் டியோ கிம் லியனை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சக வீரர்கள் மற்றும் நண்பர்களால் ஆய்லி என்று அன்பாக அழைக்கப்படும் டியோவை தேடும் பணியில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
53 வயதான டியோ கடந்த ஜூன் மாத மத்தியில் புக்கிட் ஹடாமாஸ் சென்றிருந்தபோது மாயமானார். அவர் மாயமானதாகக் கருதப்படும் பகுதியில் ரத்தக் கறைகளும், வாந்தி எடுத்ததற்கான அறிகுறிகளும் காணப்பட்டன.
இதையடுத்து அந்தக் ரத்தக்கறை சேகரிக்கப்பட்டு, பந்தாய் மருத்துவ மையத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் அது மனித ரத்தம்தான் என்பதும், O+ வகை ரத்தம் என்பதும் உறுதியானது. டியோவின் மகனும் இந்த ரத்த வகையைச் சேர்ந்தவர்தான்.
இதையடுத்து, நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையின்போது, ரத்தக்கறையின் மரபணுக்களும், டியோ மகனின் அணுக்களும் ஒத்துப் போகவில்லை.
“இரு மரபணுக்களும் வெவ்வேறானவை எனத் தெரியவந்துள்ளது. பரிசோதனையின் முடிவுகளை டியோவின் குடும்பத்தாருக்குத் தெரிவித்துள்ளோம். இந்த வழக்கில் இதுவரை எந்தவித புதிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.டியோவின் இருப்பிடம் தொடர்பில் அவரது குடும்பத்தாரிடமும் புதிய தகவல் ஏதுமில்லை. காவல்துறையினர் தொடர்ந்து அவரைத் தேடி வருகிறார்கள்,” என்று காஜாங் ஓசிபிடி உதவி ஆணையர் வில்லே ரிச்சர்ட் தெரிவித்தார்.