புதுடெல்லி, ஜூலை 27- ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று தொடங்கியது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு தனி நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து அளித்த தீர்ப்பை எதிர்த்துக் கர்நாடக அரசு சார்பிலும், தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தரப்பிலும், பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி சார்பிலும் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்நிலையில். இன்று தொடங்கிய முதல்கட்ட விசாரணையில், நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ் மற்றும் ஆர்.கே.அகர்வால் ஆகியோர், ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் வழக்குக் கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளனர்.
3 வாரத்திற்குள் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் இவ்வழக்கு தொடர்பாகப் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
4 பேரும் மனுதாக்கல் செய்த பிறகு கர்நாடகவும் தி.மு.கவும் பதில் அளிக்க வேண்டும். பின்னர் 8 வாரங்களுக்குப் பிறகு வழக்கு விசாரணை மீண்டும் நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.