Home இந்தியா பஞ்சாப் தாக்குதலில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரியின் உடலை வாங்கக் குடும்பத்தினர் மறுப்பு!

பஞ்சாப் தாக்குதலில் உயிர்நீத்த காவல்துறை அதிகாரியின் உடலை வாங்கக் குடும்பத்தினர் மறுப்பு!

561
0
SHARE
Ad

singகாபுர்தலா, ஜுலை 28- பஞ்சாப் தீவிரவாதத் தாக்குதலில் வீர மரணம் அடைந்த காவல்துறைக் கண்காணிப்பாளர் பல்ஜித் சிங்கின் உடலை அரசிடமிருந்து வாங்க அவரது குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். அதுமட்டுமல்லாமல், அவரது வாரிசுகளுக்கு அரசாங்கத்தில் வேலை வழங்கும் வரை, உடலைத் தகனம் செய்யப் போவதில்லை என்றும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அரசு வேலைக்காக அவரது உடலை வாங்க மறுப்பதா? அவரது உடலை வைத்து அரசாங்க வேலை வாங்க மிரட்டல் விடுப்பதா? நாட்டுக்காகத் தனது உயிரையே கொடுத்தவரின் குடும்பம் இவ்வளவு சுயநலமாக நடந்து கொள்ளலாமா? இதுபோன்ற கேள்விகள் எழலாம்.

தீவிரவாதிகளுடன் சண்டையிட்டு வீர மரணம் அடைந்த  குர்தாஸ்பூர் மாவட்டம் துப்பறியும் பிரிவுக் காவல்துறைக் கண்காணிப்பாளரான பல்ஜித் சிங்கின் தந்தை  ஆச்சார் சிங்கும், தீவிரவாதிகளின் தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்தான்.

#TamilSchoolmychoice

இந்தக் குடும்பத்தினர் இவ்வாறு சொல்வதன் பின்னணியைத் தெரிந்து கொண்டால், நம் மனதில் எழும் கேள்விகள் அடங்கிவிடும்.

பஞ்சாப் காவல்துறை ஆய்வாளராகப்(போலீஸ் இன்ஸ்பெக்டராகப்) பணியாற்றிய அவர், 1984-ஆம் ஆண்டு தீவிரவாதிகள் நடத்திய நாசவேலையின் காரணமாக உயிர் இழந்தார்.

பல்ஜித்சிங்கின் உடலை வாங்க மறுப்பதன் காரணத்தை அவரது மனைவி குல்வாத் கவுர் கூறினார்.

அவர் கூறியதாவது: “தீவிரவாதிகளுடன் சண்டையிட்ட காவல்துறையினருக்குத்  தேவையான பாதுகாப்பு உபகரணங்களை மாநில அரசு வழங்கவில்லை. அதனால்தான் என் கணவர் இறந்து போனார்.

அதுமட்டுமல்லாமல்,எனது மாமனார் ஆச்சார் சிங் வீர மரணம் அடைந்த போது எங்கள் குடும்பம் மிகவும் நிலை குலைந்து போனது. எனது கணவருக்கு வேலை வழங்குவதாகச் சொன்னார்கள். ஆனால்,அதற்கான பணி நியமன ஆணையைப் பெற இரண்டு ஆண்டுகள் போராட வேண்டியதாகிவிட்டது. அந்த இரண்டுஆண்டும் பொருளாதார ரீதியிலும் நாங்கள் மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது.

எனவே, பட்டதாரியான என் மகனுக்குக் காவல்துறையில் உயர் பதவி வேலையும், மகள்களுக்கு தாசில்தார் பணிக்கான பணி நியமன ஆணையை ஒப்படைக்கும் வரை அவரது உடலைத் தகனம் செய்ய மாட்டோம்” என்றார் உறுதியாக.

பஞ்சாப் தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான காவல்துறையினரின் குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும்,  குடும்பத்தினருக்கு ரூ 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்படும் என்று பஞ்சாப் அரசு தெரிவித்துள்ளது.

ஆனாலும், அறிவித்த உடன் எதுவும் நடப்பதில்லை. அலைக்கழிக்கப்பட்டுப் பல வருடங்கள் கழித்தே நடக்கும் என்பது அக்குடும்பத்தாரின் குற்றச்சாட்டு.

உண்மைதானே? ஏற்கனவே சூடு பட்டிருக்கிறார்கள்; அந்த வலி இன்னமும் இருக்கும். அதனாலேயே இந்த விடாப்பிடியாக கோரிக்கையை வைக்கிறார்கள்.