Home இந்தியா யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்குத் தடை!

யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்குத் தடை!

550
0
SHARE
Ad

yaபுதுடில்லி, ஜூலை 28- மும்பை தொடர்க் குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட யாகூப் மேமனின் தூக்குத் தண்டனைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தனக்கு விதிக்கப்பட தூக்குத் தண்டனையை நீக்கக் கோரி யாகூப்மேமன் உச்சநீதிமன்றத்தில்  மனு ஒன்றைத் தாக்கல் செய்தான்.

இம்மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.ஆர்.தாவே, குரியன் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

#TamilSchoolmychoice

அப்போது, யாகூப் மேமனின் வழக்குரைஞர் ராஜூ ராமசந்திரன், “மேமனின் சீராய்வு மனு தொடர்பான விசாரணையில் முறையான நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை; அவரது சீராய்வு மனு விசாரணையில் இருந்தபோதே அவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே,அவருக்கு வழங்கப்பட்ட தூக்குத் தண்டனையை நிறுத்தி உத்தரவிடவேண்டும்” என்று வாதிட்டார்.

இதையடுத்து, சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து உரிய விளக்கங்களைச் செவ்வாய்க்கிழமை அளிக்குமாறு மத்திய அரசின் தலைமைச் சட்ட ஆலோசகர் முகுல் ரோத்தகிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து உரிய விளக்கங்கள் கிடைத்த பின், அதை ஆராய்ந்த பிறகே, யாகூப் மேமனின் மரண தண்டனையை நிறுத்தி வைப்பது குறித்து முடிவெடுக்க முடியும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று  உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தொடர்பான விதிகள் குறித்து மீண்டும் விசாரிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த  நீதிபதிகள், ஏ.ஆர்.தாவே மற்றும் குரியன் ஜோசப் ஆகியோரிடையே தீர்ப்பு வழங்குவதில் மாறுபட்ட கருத்துத் தோன்றியது.

அதாவது: யாகூப் மேமன் மனுவை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.தாவே, ஜூலை 30-ல் தூக்குத் தண்டனை நிறைவேற்ற தடை விதிக்க மறுத்துவிட்டார். யாகூப் மேமன் வழக்கில் மகாராஷ்டிரா ஆளுநரே இறுதி முடிவு எடுக்கட்டும் என்றார்.

ஆனால், மற்றொரு நீதிபதி குரியன், ஜூலை 30-ல் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படக் கூடாது என்றார்.ஒருமித்த கருத்து ஏற்படாததால், இருவரும் கூட்டாக, இவ்வழக்கைக் கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்

அந்த அமர்வு, விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கும்வரை, யாகூப் மேமன் தூக்குத் தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தூக்குத் தண்டனைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், நீதிபதிகளின் இத்தகைய தீர்ப்பு குழப்பத்தையும், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஒருசேர ஏற்படுத்தியுள்ளது.