Home நாடு மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்? எப்போது நியமனம்?

மஇகாவின் இரண்டாவது அமைச்சர் யார்? எப்போது நியமனம்?

422
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 28 – இன்று பிரதமர் நஜிப் துன் ரசாக் அறிவித்த அமைச்சரவை மாற்றத்தில், மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நீக்கப்பட்டது கடந்த சில நாட்களாகவே எதிர்பார்க்கப்பட்டதுதான்.

MIC-logoஇருப்பினும், அவருக்குப் பதிலாக மஇகாவின் சார்பில் இரண்டாவது அமைச்சராக யாரும் நியமிக்கப்படாதது மஇகா வட்டாரங்களில் பெருத்த ஏமாற்றத்தைத் தோற்றுவித்திருக்கின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

இரண்டாவது முழு அமைச்சராக டத்தோ எம்.சரவணன் நியமிக்கப்படுவார் என்றும், சரவணனின் துணையமைச்சர் பதவிக்கு டத்தோ செனட்டர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் நியமிக்கப்படுவார் என்றும் நேற்று முதல் மஇகா வட்டாரங்களில் ஆரூடங்கள் பரவத் தொடங்கின.

#TamilSchoolmychoice

ஆனால், நஜிப்பின் புதிய அமைச்சரவையில் மஇகா சார்பில் இரண்டாவது அமைச்சர் இடம் பெறாததால், மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் என்பது மீண்டும் கிடைக்குமா அல்லது முன்புபோல் இனி மஇகாவுக்கு எப்போதும் ஒரே அமைச்சர்தானா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

மஇகாவில் தற்போது தேர்தல்கள் நடைபெறும் காலம் என்பதால், மஇகாவுக்கு இரண்டாவது அமைச்சர் மற்றும் புதிய அமைச்சரவையில் இடம் என்பது போன்ற விவகாரங்களை நஜிப் ஒத்திவைத்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்  எதிர்வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதியும், அதனைத் தொடர்ந்து மஇகா தொகுதிக் காங்கிரசுகளுக்கான தேர்தல்கள் செப்டம்பரிலும், தேசிய நிலையிலான துணைத் தலைவர், உதவித் தலைவர், மற்றும் மத்திய செயலவை  உறுப்பினர்களுக்கான தேர்தல் அக்டோபரிலும் நடத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமைச்சரவை மாற்றத்தில் மஇகாவினரின் நியமனங்கள் இடம் பெற்றால் அதனால், கட்சித் தேர்தல்களின் போக்கும் முடிவுகளும் பாதிக்கப்படலாம் என்ற நோக்கத்தில் பிரதமர் மஇகா சார்பான அமைச்சரவை மாற்றங்களை ஒத்தி வைத்திருக்கின்றார் என மஇகா வட்டாரங்களும், தேசிய முன்னணி வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.

மஇகாவின் தேர்தல்கள் முடிவடைந்ததும், மஇகா பிரதிநிதிகள் அமைச்சரவையில் இடம்பெறும் முடிவுகள் பிரதமரால் எடுக்கப்படும் என்றும் அநேகமாக, மஇகாவின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் மஇகா சார்பிலான இரண்டாவது அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

-இரா.முத்தரசன்