சியோல், ஜுலை 28- இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தென்கொரியாவை உயிர்ப் பயத்திற்கு ஆளாக்கி வந்த மெர்ஸ் வைரஸ் தாக்குதல் முடிவுக்கு வந்துவிட்டதாகத் தென்கொரியா பிரதமர் க்வாங் க்யோ ஆஹன் அறிவித்துள்ளார்.
தென்கொரியாவில் மெர்ஸ் என்ற கொடிய வைரஸ் நோய் திடீரெனப் பரவி 36 பேர் பலியானார்கள். 187 பேர் நோய்த் தாக்குதலுக்கு ஆளானார்கள். மேலும், மெர்ஸ் நோயின் அறிகுறி இருப்பதாகச் சந்தேகிக்கப்பட்ட 17 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்குத் தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் தென்கொரிய பிரதமர், சுகாதாரத்துறையின் கடும் முயற்சியின் காரணமாக மெர்ஸ் வைரஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது என்றும், இனி மக்கள் எந்தவிதப் பதற்றத்திற்கோ பயத்திற்கோ ஆளாகாமல் நிம்மதியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
மெர்ஸ் வைரஸ் பரவலால் தென்கொரியாவில் பெருத்த உயிர்ச் சேதம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல்,பெரும் பொருளாதாரப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.
மேலும்,வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகையிலும் 40 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
.