Home உலகம் தாய்லாந்தில் மெர்ஸ் நோய்க்கு 175 பேர் பாதிப்பு!

தாய்லாந்தில் மெர்ஸ் நோய்க்கு 175 பேர் பாதிப்பு!

504
0
SHARE
Ad

mersபாங்காக், ஜூன் 22 – தென்கொரியாவைத் தொடர்ந்து தாய்லாந்து நாட்டில் மெர்ஸ் நோய் பரவி வருகிறது. அங்கு 175 பேருக்கு இந்நோய்த் தாக்கம் இருப்பது  கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மெர்ஸ் வைரஸ் பரவாமல் தடுக்க அந்நாட்டு அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தென் கொரியாவில் கடந்த  20-ஆம் தேதி மெர்ஸ் நோய் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. சவுதி அரேபியா சென்று திரும்பிய நபருக்கு மெர்ஸ் வைரஸ் இருப்பது பரிசோதனையில்  தெரியவந்தது.

இந்நிலையில், தென்கொரியாவில் படிப்படியாக மெர்ஸ் நோய் பரவியது. இந்நோய்க்கு, இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர். தென்கொரியாவில்,  மெர்ஸ் நோய் அறிகுறி உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்  பயனாகக் கடந்த சில தினங்களாக மெர்ஸ் வைரஸ் பாதிப்பு எதுவும் அங்கு இல்லை எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தாய்லாந்து நாட்டில் மெர்ஸ் வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.

இதுவரை, 175 பேருக்கு மெர்ஸ் அறிகுறி இருப்பதாகத்  தெரியவந்துள்ளது. அவர்களுக்குப் பிரத்யேக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறப்புச் சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ள நபர்களின் உடல்நலத்தை  மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

ஓமன் நாட்டைச் சேர்ந்த 75 வயது நபர் இதய சிகிச்சைக்காகத் தாய்லாந்து வந்துள்ளார். அவரைப்  பரிசோதனை செய்தபோது, அவருக்கு மெர்ஸ் வைரசின் தாக்கம் இருப்பது தெரியவந்தது.

மேலும், முதியவருடன் வந்த உறவினர்கள் 3 பேருக்கும்  மெர்ஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மெர்ஸ் நோய் அறிகுறி இருப்பவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் இல்லை என்றும், அவர்களுடைய உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தாய்லாந்து நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும், மெர்ஸ் வைரஸ் பரவுவதைத் தடுக்க அந்நாட்டு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 2012-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவில் மெர்ஸ் நோய்த் தாக்கம் இருப்பது முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நோய் மத்தியக் கிழக்கு  நாடுகளில்தான் அதிகம் பரவுகிறது. ஒட்டகங்களில் இருந்து மெர்ஸ் நோய் பரவுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது.