Home நாடு “மாபெரும் விஞ்ஞானி – சிறந்த மனிதாபிமானியை இழந்தோம்” – அப்துல் கலாம் மறைவுக்கு டாக்டர் சுப்ரா...

“மாபெரும் விஞ்ஞானி – சிறந்த மனிதாபிமானியை இழந்தோம்” – அப்துல் கலாம் மறைவுக்கு டாக்டர் சுப்ரா இரங்கல்

545
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 28 – நேற்று காலமான முன்னாள் இந்திய அதிபர் ஏபிஜே அப்துல் கலாமின் மறைவுக்கு மஇகா இடைக்காலத் தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

APJ-Abdul-Kalam1“பாரத ரத்னா அப்துல் கலாம் என்ற மாபெரும் மனிதரை இழந்து இன்று உலகமே ஆழ்ந்த துயரத்தில் மூழ்கியுள்ளது. மனிதருள் மாணிக்கமாக, மிக உயரிய, அரிய குணாதிசயங்கள் கொண்ட மனிதராக அப்துல் கலாம் திகழ்ந்தார்” என டாக்டர் சுப்ரா இன்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் அப்துல் கலாமுக்கு புகழாரம் சூட்டினார்.

“உலகம் முழுவதும் போற்றிய சிறந்த விஞ்ஞானியாக மட்டும் அல்லாமல், சாதாரண குடும்பப் பின்னணியில் பிறந்து வளர்ந்து, கல்வி, உழைப்பை மட்டும் கொண்டு இந்தியாவின் அதிபராக உயர்ந்த பெருமைக்குரியவர் அப்துல் கலாம். அந்தப் பதவிக்கு மிகப் பெரிய மரியாதையையும், கௌரவத்தையும் ஏற்படுத்தித் தந்தவர் கலாம். ஒரு மனிதனுக்குப் பெருமை அவன் வகிக்கும் பதவியால் வருவதல்ல. மாறாக, அந்த மனிதனின் நற்பண்புகள்தான் ஒரு பதவிக்கு பெருமையைத் தேடித் தரும் என்ற முதுமொழிக்கு ஏற்ப, தான் வகித்த பதவிக்கு பெருமையைத் தேடித் தந்தவர் அப்துல் கலாம்” என்றும் சுப்ரா தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

Dr Subramaniam“குறிப்பாக இளைய சமுதாயத்தினருக்கு நம்பிக்கையையும், ஊக்கத்தையும் ஊட்டி அதன் மூலம், அவர்களுக்கு சக்தியூட்டுபவராக கலாம் திகழ்ந்தார். இனம், சமய பேதங்களால் பிரிந்து கிடக்கும் இன்றைய உலகில் எல்லா கலாச்சார சடங்குகளிலும், மத போதனைகளிலும் நல்ல அம்சங்களை மட்டும் பார்க்கும் அப்துல் கலாமின் அணுகுமுறையே பிரிந்து கிடக்கும் உலகை இணைக்கக் கூடிய சிறந்த சாதனமாகக் கருதப்படுகின்றது. அவர் மிகச் சிறந்த விஞ்ஞானியாக மட்டுமல்லாமல், மிகப் பெரிய மனிதாபிமானியாகவும்  திகழ்ந்தார். விஞ்ஞானத்தையும் தாண்டி இந்த உலகத்திற்கு பல நல்ல அம்சங்களைப் போதித்தவர் அவர். தனது மிகச் சிறந்த புதல்வர்களில் ஒருவரை இழந்து இன்று உலகம் துயரத்திலும், துக்கத்திலும் ஆழ்ந்து நிற்கின்றது” என அப்துல் கலாமின் அளப்பரிய சேவைகளை நினைவுகூர்ந்து சுப்ரா தனது இரங்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“நமது சமய, இனப் பின்னணிகளை ஒரு கணம் ஒதுக்கிவைத்துவிட்டு, அனைவரும் ஒன்றிணைந்து ஒரே மனதுடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்” என்றும் சுப்ரா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.