மும்பை,ஜூலை 30- மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள சிறையில் இன்று தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்ட யாகூப் மேமனின் உடல், அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் மும்பைக்குக் கொண்டு வரப்பட்டது.
மும்பை தொடர்க் குண்டு வெடிப்பில் தொடர்புடைய யாகூப் மேமனுக்கு ஜூலை 30-ஆம் தேதி காலை 7 மணிக்குத் தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தூக்குத் தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும், மகாராஷ்டிர மாநில ஆளுநருக்கும், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கும் அனுப்பிய கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால் அவர் தூக்கிலிடப்படுவது நேற்று உறுதியானது.
கடைசி வரை அவர் மேற்கொண்ட எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை. அதைத் தொடர்ந்து, இன்று காலை அவர் தூக்கிலிடப்பட்டார். அரசாங்க முறைப்படிசெய்ய வேண்டிய காரியங்கள் எல்லாம் முடிந்த பின்,யாகூப் மேமனின் உடல் அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
யாகூப்மேமனின் உடலை வைத்து எந்தப் பிரச்சினையிலும் ஈடுபடக் கூடாது என்று அவர் சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அவரது உடலைப் பெற்றுக் கொண்ட அவரது சகோதரர், விமானம் மூலம் மும்பைக்குக் கொண்டு வந்தார்.
யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டதால் தீவிரவாதிகள் தாக்குதல் ஏதும் நடத்தக் கூடும் என்பதால், மும்பையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மும்பையில் அவரது குடும்பத்தார் வசிக்கும் பகுதியில் உள்ள மயானத்தில் அவரது உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அவரது இறுதிச் சடங்கில் குடும்பத்தாரும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொள்ள காவல்துறை அனுமதி அனுமதி அளித்துள்ளது.
மேலும், யாகூப் மேமனின் உடலை யாரும் புகைப்படம் எடுக்கவோ அல்லது காணொளி எடுக்கவோ கூடாதென்று தடை விதிக்கப்பட்டுள்ளது.