Home நாடு “உலக இந்தியர்களை ஒன்றிணைக்கும் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மாமனிதர் அப்துல் கலாம்” – மஇகா தலைமையகம் இரங்கல்

“உலக இந்தியர்களை ஒன்றிணைக்கும் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மாமனிதர் அப்துல் கலாம்” – மஇகா தலைமையகம் இரங்கல்

597
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூலை 30 – முன்னாள் இந்திய அதிபர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் மறைவுக்காக மஇகா தலைமையகமும், இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியமும் தங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

dato-subraமஇகா தலைமையகம் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் “கடந்த ஜூலை 27ஆம் தேதி யாரும் எதிர்பாராத விதமாக, உலக மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகி அகால மரணமடைந்த முன்னாள் இந்தியக் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் மறைவுக்கு மலேசிய இந்தியர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அண்மைய ஆண்டுகளில் அப்துல் கலாம் போன்று, உலக இந்தியர்கள் அனைவரையும், இனம், மதம், ஜாதி, நாடு கடந்து ஒரே மையப் புள்ளியில் ஈர்த்த, இணைத்த, ஒரு மாமனிதரை உலகம் பார்த்ததில்லை. இந்தியர்கள் மட்டும் என்றில்லாமல், நமது நாட்டுப் பிரதமர், நமது நாட்டு அண்டை நாடான சிங்கப்பூர் பிரதமர் உட்பட பல உலகத் தலைவர்களும் அன்னாரின் மறைவுக்கு தங்களின் இரங்கலை உணர்வுபூர்வமாகத் தெரிவித்திருப்பது, அவரது புகழும், ஆதிக்கமும் உலகமெங்கும் எவ்வளவு தூரம் பரவியிருந்தது என்பதற்கோர் உதாரணமாகும்” என்று தெரிவித்துள்ளனர்.

மஇகா தலைமைகயத்தின் இரங்கல் செய்தியில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டிருக்கிறது:-

#TamilSchoolmychoice

“பல்வேறு பிரிவினைகளால் சிதறுண்டு கிடக்கும் இந்தியாவில், குறிப்பாக வடநாட்டினர், தென் நாட்டினர் என்ற பாகுபாடு எப்போதும் நிலவி வரும் ஒரு நாட்டில், தமிழகத்தின் கடைக் கோடியில் சாதாரண குடும்பத்தில் உதித்த,  தமிழரான அப்துல் கலாம், பிறப்பால் இஸ்லாமியராக இருந்தாலும், இந்தியாவின் நவீனத் தற்காப்பு பரிசோதனைகளுக்கு தலைவராக உயர்ந்தார் என்பதிலிருந்தே நாடும், மக்களும், மத்திய அரசாங்க மையங்களும், அரசியல் தலைவர்களும் அவர் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்கள் என்பதும், அந்த நம்பிக்கையை விட அதிகமாகவே அவர் வாழ்ந்து காட்டினார் என்பதும் வரலாறு.”

MIC-Logo“வழக்கமாக இந்திய அதிபர்களாக பதவி வகிப்பவர்கள், தங்களின் பதவிக் காலம் முடிவடைந்ததும், ஓய்வெடுத்து ஒதுங்கிக் கொண்டு தங்களின் சொந்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், இந்திய அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும், கௌரவம் பார்க்காமல், மீண்டும் கல்வி சேவைக்கே திரும்பிய உன்னத குணம் கொண்டவர் அப்துல் கலாம்.”

“பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகள் என இந்தியாவிலும், உலக நாடுகளிலும் சுற்றி வந்து, குறிப்பாக இளைய சமுதாயத்தின் உணர்வுகளுக்கு எழுச்சியூட்டி, அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டி, பணியாற்றியவர் அப்துல் கலாம்.”

“மலேசியாவுக்கும் அவர் வருகை தந்து நம்மிடையே உரையாற்றி அவரது நல்லெண்ணக் கருத்துக்களை நமது மனங்களில் விதைத்துச் சென்றிருக்கின்றார். அதே வேளையில், அதிபராக இருந்த காலங்களில் இந்தியாவில் நடைபெற்ற பாரதிய பிரவாசி சம்மான் மாநாடுகளில் உலக இந்திய வம்சாவளியினரிடையே அவர் ஆற்றிய உரைகளையும், அதில் பொதிந்திருந்த கருத்துக்களையும் அந்த மாநாடுகளில் கலந்து கொண்ட பலர் மறந்திருக்க மாட்டார்கள்.”

“இறுதி மூச்சு வரை கல்விச் சேவையிலும், பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்துவதிலும், தான் ஈடுபட்டிருக்க வேண்டும், உழைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு செயல்பட்ட அப்துல் கலாம் அவ்வாறே பல்கலைக் கழகமொன்றில், மாணவர்களிடையே உரையாற்றும்போது அவரது உயிர் பிரிய நேர்ந்தது அவருக்கு இன்னொரு வகையில் மகுடம் சூட்டியிருக்கின்றது.”

“எந்த மதத்திலும் பொதிந்திருந்த நல்ல கருத்துக்களை அவர் எடுத்துக் காட்டிப் பேசுவார். மோசமான மனிதரிடத்திலும் புதைந்திருக்கும் நற்குணங்களை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பது அவரது அணுகுமுறையாக இருந்தது.”

“எந்த சூழ்நிலையிலும், அவருடைய உரைகளில் திருக்குறள் இடம் பெற்றிருந்ததும், திருக்குறளின் பல வாசகங்களுக்கு ஏற்ப அவர் வாழ்ந்து காட்டியதும், திருக்குறள் இன்றைக்கும் மனித வாழ்வில் எத்தகைய மேன்மைகளைக் கொண்டுவரக் கூடியது என்பதற்கான பொருத்தமான  உதாரணம்.”

“அவரது மறைவுக்குப் பின்னர் நாம் செய்யக் கூடிய பெருமை, அவரது வாழ்க்கை முறைகளின் தத்துவங்களை நாமும் பின்பற்ற முற்படுவதும்,நமது இளைய சமுதாயத்தினருக்கு கற்றுக் கொடுக்க முற்படுவதும்தான். அன்னாரின் மறைவுக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நாம் அனைவரும் பிரார்த்திப்போம்”