Home இந்தியா கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானி – பாகிஸ்தான் விஞ்ஞானி சர்ச்சைப் பேச்சு!

கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானி – பாகிஸ்தான் விஞ்ஞானி சர்ச்சைப் பேச்சு!

537
0
SHARE
Ad

AQK Kalamஇஸ்லாமாபாத், ஜூலை 29 – “கலாம் ஒரு சாதாரண விஞ்ஞானி தான். அவர் பெரிதாக கூறிக் கொள்ளும் அளவிற்கு எதையும் சாதித்து விட வில்லை” என்று பாகிஸ்தான் அணுஆராய்ச்சியின் தந்தை அப்துல் காதீர் கான், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளது இந்தியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் ‘பாரத ரத்னா’ அப்துல் கலாமின் மறைவு இந்தியர்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ள நிலையில், அவரின் இறுதிச் சடங்குகள், அவரது சொந்த ஊரான ராமேஸ்வரத்தில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியர்கள் மட்டுமல்லாது பெரும்பாலான உலகத் தலைவர்கள், கலாமிற்கு புகழாரம் சேர்த்து வரும் நிலையில், விஞ்ஞானி அப்துல் காதீர் கான், சமீபத்தில் அளித்த பேட்டியில், “கலாம் தனது வாழ்க்கையின் அனைத்து பகுதியிலும் எளிமையைக் கடைபிடித்தார். ஆனால் அவர் ஒரு சாதாரண விஞ்ஞானி தான். அவரை பற்றி பெரிதாக நினைவில் வைத்து கொள்ளும் அளவிற்கு அவர் எதுவும் சாதித்து விடவில்லை. இந்தியாவின் ஏவுகணைத் திட்டமும் ரஷ்யாவின் உதவியால் தான் வெற்றி பெற்றது” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் அவர், “கலாம், இந்தியக் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றதில் கூட மிகப் பெரிய அரசியல் உள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகளுக்காகத் தான், கலாம் குடியரசுத் தலைவராக்கப்பட்டார்” என்றும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அப்துல் காதீர் கானின் இந்த பேட்டி, இந்தியர்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. காதீர் கானின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய இணையவாசிகள், “கலாம் நாட்டிற்காக கடைசி வரை பாடுபட்டார். அவரின் இறுதி மூச்சு இந்தியர்களின் நெஞ்சங்களில் என்றும் இருக்கும். பணத்திற்காக, பாகிஸ்தானின் அணுஆயுத ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்ற அப்துல் காதீர் கானுக்கு, கலாமை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை” என்று இணைய பக்கங்களில் குறிப்பிட்டு வருகின்றனர்.

பாகிஸ்தான் விஞ்ஞானி அப்துல் காதீர் கான், கடந்த 2004-ம் ஆண்டு, அந்நாட்டின் அணுஆயுத ரகசியங்களை வெளிநாட்டிற்கு விற்றார் என்று கூறி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர், கடந்த 2009-ம் ஆண்டு, இஸ்லாமாபாத் நீதிமன்றம் அவரை நிரபராதி என்று கூறி விடுதலை செய்தது குறிப்பிடத்தக்கது.