சென்னை, ஜூலை 29- காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களைப் பற்றி அவதூறாக பேசியுள்ளதாகக் கூறி, நடிகர் தனுஷ், வெற்றிமாறன் முதலானோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில், அவர்கள் நேரில் ஆஜராக விலக்கு அளித்தும், வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காக்கா முட்டை படத்தில் வழக்கறிஞர்களைப் பற்றியும் வழக்கறிஞர் தொழிலைப் பற்றியும் அவதூறான வசனங்களும் காட்சிகளும் இடம் பெற்றிருப்பதாகக் கூறி, அகில இந்திய வழக்கறிஞர்கள் நலச் சங்கத்தின் தலைவர் எஸ்.மணிவண்ணன்,அந்தப்படத்தின் தயாரிப்பாளர்களாகிய நடிகர் தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன், அப்படத்தை இயக்கிய மணிகண்டன், அவதூறுக் காட்சியில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் மீது எழும்பூர் தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடுத்தார்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகர் தனுஷ் உட்பட நான்கு பேரும் ஆகஸ்டு 6-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகச் சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து நான்கு பேரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தனர்.
அம்மனுவில், “காக்கா முட்டை படத்திற்கு 2 தேசிய விருதுகளும்,பல்வேறு சர்வதேச விருகளும் கிடைத்துள்ளன. படத்தில் இடம் பெறும் வசனங்கள் பொதுமக்கள் பேசும் சாதாரண வசனங்கள். யாரையும் தவறாகப் பேசும் வசனங்கள் அல்ல. எனவே, இவ்வழக்கை ரத்து செய்ய வேண்டும்; விசாரணைக்கு நேரில் வர எங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர்.
இம்மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி பி.என்.பிரகாஷ், அவர்கள் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை விதித்தார்.வழக்கில் நேரில் ஆஜராகவும் விலக்கு அளித்து உத்தரவிட்டார்.
மேலும், வழக்கறிஞர் மணிவண்ணன் 4 வாரத்தில் பதிலளிக்கவும் நீதிபதி பிரகாஷ் ஆணையிட்டார்.