அம்பாங், மார்ச் 9 – கடந்த புதன்கிழமை அம்பாங்கிலுள்ள தாமான் தாசேக் பெர்டானாவில் மக்களை சந்திக்கும் நிகழ்வில் உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் எதிர்வரும் 13வது பொதுத்தேர்தலில் மக்கள் கூட்டணி ஆட்சியை பிடிக்கும்பட்சத்தில் ஆஸ்ட்ரோ தொலைக்காட்சிக் கட்டணம் நிச்சயம் குறைக்கப்படும் என்றார்.
அவர் இதை தெரிவித்தபோது மக்கள் கைதட்டி ஆரவாரித்தனர்.
ஆஸ்ட்ரோ கட்டணம் குறைப்பது சாத்தியமான ஒன்றே
அன்வார் மேலும் கூறுகையில், அம்னோ மற்றும் தேசிய முன்னணி ஆதரவாளர்கள் தங்கள் ஆக்கிரமிப்பை ஆஸ்ட்ரோவில் குறைத்தாலே ஆஸ்ட்ரோ கட்டணம் குறைப்பது நிச்சயம் சாத்தியப்படக்கூடிய ஒன்றே என்றார் அவர்.
“ஆஸ்ட்ரோவின் லாபம் 2011ஆம் ஆண்டைவிட 2012இல் 30 கோடி கூடுதலாக, அதாவது 280இலிருந்து 310 கோடியாக உயர்ந்துள்ளது. எனவே மக்கள் கூட்டணி அரசில் ஆஸ்ட்ரோவின் கட்டணத்தை குறைப்பதால் அந்த நிறுவனம் திவாலாகிவிடாது” என்றார் முன்னாள் நிதியமைச்சருமான அன்வார் இப்ராஹிம்.
டான்ஸ்ரீ ஆனந்தகிருஷ்ணனுடன் பேசுவோம்.
மக்கள் கூட்டணி புத்ராஜெயாவை கைப்பற்றினால், நிச்சயமாக இரண்டே வாரத்தில் தற்போது ஆஸ்ட்ரோ நிறுவனத்தில் 43 விழுக்காடு பங்குகளை வைத்திருக்கும் ஆனந்த கிருஷ்ணனை சந்தித்து அதன் கட்டணத்தை குறைக்கச்சொல்வோம் என்று உறுதியளித்தார் அன்வார்.