வாஷிங்டன், ஆகஸ்ட் 7 – தெற்காசியாவில் தூதரக உயர் பதவிகளுக்கு இந்திய-அமெரிக்கர்களையே தொடர்ந்து அமெரிக்கா, முன்னிலைப்படுத்தி வருகிறது. இலங்கை மற்றும் மாலத்தீவிற்கான அமெரிக்க தூதராக மீண்டும் ஒரு இந்திய-அமெரிக்கர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதுல் கேஷாப் (படம்) என்ற அந்த இந்திய-அமெரிக்கரை மேற்கூறிய நாடுகளின் புதிய தூதுவராக நியமிக்க, அமெரிக்க செனட் சபை ஒப்புதல் வழங்கி உள்ளது.
ஏற்கனவே இந்தியாவிற்கான அமெரிக்க தூதுவராக இந்திய-அமெரிக்கர் ரிச்சர்ட் ராகுல் வர்மா நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், இந்தியா மற்றும் இலங்கை விவகாரங்களை கையாளும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க வெளியுறவுத் துறை ஆணையத்தின் துணை செயலாளர் நிஷா பிஸ்வாலும் இந்திய அமெரிக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்கள் வரிசையில், அதுல் கேஷாப்பின் நியமனம், தெற்காசியாவில் குறிப்பாக சீனாவை விடுத்து, ஏனைய நாடுகளில் அமெரிக்காவிற்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதற்காக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது.
பஞ்சாப்பை பூர்விகமாகக் கொண்ட கேஷாப்பின் குடும்பத்தினர், பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறிவிட்டனர். இலங்கை தூதுவராக பதவி ஏற்பதற்கு முன்னர், கேஷாப், 2005–2008 காலகட்டத்தில், டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணை அரசியல் ஆலோசகராக பணியாற்றி உள்ளார். 2003–ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில், வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு வட்டார விவகாரங்களுக்கான பிரிவில் இயக்குனராகவும் பணியாற்றி அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.