வாஷிங்டன்,ஜூலை 18- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அடிக்கடி ஏற்படும் தாக்குலையும், அதனால் உருவாகும் பதற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகப் போர் ஒப்பந்தத்தையும் மீறிப் பாகிஸ்தான், இந்திய எல்லையில் அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருவதால், எல்லைப் பகுதிகள் பதற்றம் நிறைந்தவையாக உள்ளன. எல்லைப் பகுதியிலுள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் சென்று தங்கியுள்ளனர்.
இதனிடையே, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய-பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை அமெரிக்கா கவனித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் கெர்ரி தெரிவித்திருப்பதாவது: “இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெறுவதாகத் தொடந்து ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது எல்லையை ஒட்டிய பகுதிகளின் பாதுகாப்புக்குக் கண்டிப்பாக உகந்ததல்ல.
இந்திய-பாகிஸ்தான் எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையை அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந்தப் பதற்றம் தணிக்கப்படவேண்டும் என்றே அமெரிக்கா விரும்புகிறது.தொடர்ந்து பதற்றம் நீடித்தால் அமெரிக்கா தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்” என்றார்.