சென்னை, ஜுலை 18- நடிகர் திலகம் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட வேண்டும் என்று நடிகர் சங்கத்தை வலியுறுத்தி, வரும் 21-ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதப் பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாகச் சிவாஜி சமூக நலப்பேரவை அறிவித்துள்ளது.
இது குறித்துச் சிவாஜி சமூக நலப்பேரவையின் தலைவர் கூறியதாவது: நடிகர் திலகம் சிவாஜிக்கு மணி மண்டபம் கட்ட அரசு இடம் அளித்தும் மண்டபத்தைக் கட்டாமல் நடிகர் சங்கம் ஏமாற்றி வருகிறது.
நடிகர் திலகம் சிவாஜி மறைவுக்குப் பின்னர் கடந்த 2001 ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் மணிமண்டபம் கட்ட இடம் ஒதுக்கிதர வேண்டும் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு தமிழக அரசு அடையாறு சத்தியா ஸ்டியோ எதிரில் பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான 12 கிரவுண்டு இடத்தை நடிகர் சங்கத்திற்கு ஒதுக்கியிருப்பதாக அறிவித்தது.
அரசு இலவசமாக அளித்த இடத்தில் சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று நடிகர் சங்கம் தெரிவித்தது.ஆனால் இதுவரை ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கவில்லை.
ஒவ்வோர் ஆண்டும் சிவாஜி பிறந்த தினமான அக்டோபர் 1-ஆம் தேதி இதுகுறித்துப் பேசுவார்கள். அதோடு சரி. அதன்பின்பு ஒரு நடவடிக்கையும் இருக்காது. மணிமண்டபம் வரும் என்று நம்பிய ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
.தன்னுடைய கலைத்திறனால் நடிப்பாற்றலால் உலகையே தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்கவைத்த நடிகர் திலகம் சிவாஜிக்கு நடிகர் சங்கமோ அல்லது தமிழக அரசோ அமைப்பது அவருக்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்.
இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் 21 ஆம் தேதி சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு உண்ணாவிரதப் பேராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் அனைத்துக் கட்சியைச் சேர்ந்தவர்களையும், நடிகர்களையும் அழைத்துள்ளோம்” என்று கூறினார்.