மும்பை, ஜூலை 18- மேகியில் காரீயம் இருப்பதற்கான பரிசோதனையை மேற்கொள்ள, இந்தியாவில் சரியான ஆய்வக வசதி இல்லைஎன்று நெஸ்லே நிறுவனத்தின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.
அளவுக்கு அதிகமான காரீயம் கலந்திருப்பதாகக் கூறி, நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு மத்திய உணவுத் தரக் கட்டுப்பாட்டு ஆணையம் தடை விதித்ததும், அதனைத் தொடர்ந்து நெஸ்லே நிறுவனத்தின் நூடுல்ஸ் உணவுப் பொருட்கள் இந்தியா முழுவதும் அகற்றப்பட்டதும் நாமறிந்ததே!
இந்நிலையில், மத்திய அரசு விதித்த தடை உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்ற நெஸ்லே நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இச்சூழ்நிலையில், “நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகியில் காரீயம் கலந்திருப்பது குறித்த சோதனையை மேற்கொள்ள இந்தியாவில் எந்த ஆய்வகத்திலும் நவீன வசதி இல்லை. பல வருடங்களாக மக்கள் மத்தியில் தங்கள் நிறுவனம் பெற்ற செல்வாக்கை இந்தத் தடை உத்தரவு அழித்துவிட்டது. இந்தத் தடை உத்தரவு ஏதேச்சதிகாரமான நடவடிக்கை” என்று நெஸ்லே நிறுவனத்தின் வழக்கறிஞர் குற்றம் சாட்டியுள்ளார்.