சென்னை, ஆகஸ்ட் 7- சென்னைப் பல்கலைக்கழகத்தில் உள்ள நூற்றாண்டு அரங்கத்தில் தேசியக் கைத்தறித் தினத் தொடக்க விழா நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்குபெறப் பிரதமர் மோடி இன்று காலை சென்னை வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத காரில் பாதுகாப்புப் படை வீரர்கள் புடை சூழ சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தார். வழியெங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசியக் கைத்தறித் தின விழாவை முன்னிட்டு, நூற்றாண்டு விழா அரங்கில் வைக்கப்பட்டுள்ள கைத்தறிக் கண்காட்சியை மோடி பார்வையிட்டார்.
அப்போது அவருக்குக் கைத்தறி அங்கவஸ்திரம் ஒன்றும் நெசவாளர்கள் சார்பில் வழங்கப்பட்டது. அதை ஆர்வத்தோடு அணிந்து கொண்டார். பின்பு, ஒவ்வோர் அறையாகச் சென்று கைத்தறித் துணிகளைப் பார்வையிட்ட மோடி, அதன் சிறப்பம்சங்கள் குறித்து நெசவாளர்களிடம் கேட்டறிந்தார்.
அவருடன் ஆளுநர் ரோசய்யா, மத்திய ஆடைத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்க்வார், தமிழகக் கதராடைத்துறை அமைச்சர் கோகுலஇந்திரா, நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இருக்கிறார்கள்.
11.30 மணியளவில் கைத்தறி தின விழா தொடங்கியது.