சிங்கப்பூர், ஆகஸ்ட் 9 – 1965-ம் ஆண்டு, ஆகஸ்ட் 9-ம் தேதி, மலேசியாவிலிருந்து பிரிந்த சிங்கப்பூர், இன்று தனது 50-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.
பன்மொழி மக்கள், அவர்கள் கடைபிடிக்கும் பன்முகக் கலாச்சாரம் என்று பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும், அவற்றில் ஒற்றுமையைக் கண்டு, நாட்டின் முன்னேற்றத்தையே குறிக்கோளாகக் கொண்டு பாடுபடும் முன்னோடியான கலாச்சாரத்தை அந்நாட்டு மக்கள் தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர்.
அவர்களுக்கு அந்நாட்டு பிரதமர் லீ சியான் லூங், விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், “சரியாக, 50 வருடங்களுக்கு முன்பு தான், வானொலி அறிவிப்பாளர் ஒருவர் நமது நாட்டின் சுதந்திரத்தை அறிவித்தார். நாம் 50 வருடங்களை வெற்றிகரமாக கடந்து விட்டோம். செழிப்பு மற்றும் முன்னேற்றத்தை கொண்டாடும் இந்த வேளையில், நாம் இந்த நிலைக்கு வருவதற்காக எவ்வளவு உழைத்தோம் என்பதை மறந்து விட வேண்டாம்.”
“நமது இந்த நிலை, சுய முன்னேற்றத்தால் வந்தது. எங்கிருந்தும் பெறப்பட்டதல்ல. மொழி, மதம், இன வேறுபாடுகளைக் களைந்து, ஒற்றுமையுடன் பாடுபட்டதால் கிடைத்த வெற்றி தான் நமது முன்னேற்றம். அதனை மேலும் மேலும், தொடர்ந்து செய்து கொண்டிருப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.