திருவனந்தபுரம், ஆகஸ்ட் 11- 2014–ஆம் ஆண்டிற்கான கேரள அரசின் 45-ஆவது திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
பழம்பெரும் கதாசிரியர் ஜான் பால் தலைமையில் 9 பேர் கொண்ட நடுவர் குழு, 38 சினிமா விருதுகளுக்குக் கலைஞர்களைத் தேர்வு செய்தது. அவ்விருதுகளைச் சினிமாத் துறை அமைச்சர் திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.
அதன்படி, சிறந்த நடிகர் விருதை ‘பெங்களூர் டேஸ்’, ‘1983’ ஆகிய படங்களில் நடித்ததற்காக நிவின் பாலியும், ‘மை லைப் பார்ட்னர்’ படத்தில் நடித்ததற்காகச் சுதேவ் நாயரும் பகிர்ந்து கொள்கின்றனர்.
‘பெங்களூர் டேஸ்’, ‘ஓம் சாந்தி ஓஷானா’ ஆகிய படங்களுக்காக நஸ்ரியா, சிறந்த நடிகை விருதைப் பெறுகிறார்.
தேசிய விருது பெற்ற ‘ஒட்டாள்’ படம், சிறந்த படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. ‘
‘ஓராள்போக்கம்’ படத்தை இயக்கிய சணல்குமார் சசிதரன், சிறந்த இயக்குநர் விருதைப் பெறுகிறார்.
‘ஒய்ட் பாய்ஸ்’ படப் பாடலுக்காகச் சிறந்த பாடகர் விருதை ஜேசுதாசும், ‘ஹவ் ஓல்ட் ஆர் யூ’ படத்துக்காகச் சிறந்த பாடகி விருதை ஷ்ரேயா கோஷலும் பெறுகிறார்கள்.
சிறந்த இயக்குநர் விருது பெற்ற சணல்குமார் சசிதரனுக்கு ரூ.2 லட்சமும், பாராட்டுப் பத்திரம் மற்றும் பட்டயமும் வழங்கப்படும்.
சிறந்த நடிகர் விருது பெற்ற நிவின் பாலி, சுதேவ் நாயர் மற்றும் சிறந்த நடிகை விருது பெற்ற நஸ்ரியா ஆகியோருக்குத் தலா ரூ.50 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.
சிறந்த பாடகர் மற்றும் பாடகி விருது பெற்ற ஜேசுதாஸ்,ஷ்ரேயா கோஷல் இருவருகும் தலா ரூ.25ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம், பட்டயம் ஆகியவை வழங்கப்படும்.