புதுடில்லி, ஆகஸ்ட் 12- சட்டவிரோதத் தொலைபேசி இணைப்பக வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனை அடுத்த மாதம் 14-ஆம் தேதி வரை சிபிஐ கைது செய்ய, உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
தயாநிதி மாறன் மத்தியத் தொலை தொடர்புத்துறை அமைச்சராக இருந்த போது, சட்டவிரோதமாகத் தனது வீட்டில் 300-க்கும் அதிகமான தொலைபேசி இணைப்புகளை இணைத்துத் தனது சகோதரர் கலாநிதிமாறனின் சன் குழுமத் தொலைக்காட்சி அலுவல்களுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்ததால், சிபிஐ அவரைக் கைது செய்யும் சூழ்நிலை உருவானது.
அதனால் அவர் கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் 6 வார இடைக்கால முன்பிணை பெற்றார்.
ஆனாலும், அது தொடர்பான வழக்கு விசாரணைக்குத் தயாநிதி மாறன் ஒத்துழைக்க மறுத்ததால், சிபிஐ-யின் வேண்டுகோளை ஏற்று, உயர்நீதிமன்றம் அவரது முன் பிணையை ரத்து செய்தது.மேலும், மூன்று நாட்களுக்குள் சிபிஐ-யிடம் சரணடையக் காலக் கெடுவும் விதித்தது.
இதை எதிர்த்து அவர் நேற்று உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். தமது மனுவை அவசரமாகக் கருதி விசாரிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி மூலம் கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து இம்மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.
இன்றைய விசாரணையின் முடிவில், தயாநிதி மாறனைச் செப்டம்பர் 14-ஆம் தேதி வரை சி.பி.ஐ.கைது செய்ய இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனால் தயாநிதி மாறன் தற்காலிகமாகக் கைது நடவடிக்கையிலிருந்து தப்பித்துள்ளார்.