புதுடில்லி, ஆகஸ்ட் 18- ஜம்மு காஷ்மீர் மாநிலம் உதாம்பூர் தாக்குதலில் ஈடுபட்ட போது பிடிபட்ட தீவிரவாதி உஸ்மான்கானுடன் வந்த தீவிரவாதிகள் இருவரின் புகைப்படத்தைத் தேசியப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்டுள்ளது.
இவர்கள் இன்னும் இந்தியாவிற்குள்ளேயே சுற்றித் திரிவதாகவும் இவர்களை அடையாளம் கண்டு தகவல் சொன்னாலோ அல்லது பிடித்துக் கொடுத்தாலோ அவர்களுக்கு 5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் புலனாய்வுத்துறை அறிவித்துள்ளது.
கடந்த 5–ஆம் தேதி காலை உதாம்பூரில் பாதுகாப்புப் படை வீரர்கள் வந்த ராணுவ வாகனத்தின் மீது கையெறி குண்டை வீசித் தாக்குதல் நடத்திய இரண்டு தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். மற்றொருவனை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
அவன் பெயர் முகமது நவீத் என்ற உஸ்மான்கான். வயது 23. பாகிஸ்தானில் உள்ள பைசலாபாத்தைச் சேர்ந்தவன்.
ஆனால், அவன் முதலில் முன்னுக்குப் பின் முரணான தகவலையே சொன்னான். தீவிர விசாரிப்பிற்குப் பின்பே அவன் சில தகவல்களைச் சொன்னான். தங்களுடன் மேலும் இரண்டு தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் நுழைந்தனர் என்றும், இந்தியாவிற்குள் வந்ததும் இரண்டு குழுவாகப் பிரிந்துவிட்டோம் என்றும் அவன் தெரிவித்தான்.
ஆனால், அதில் எந்த அளவுக்கு உண்மையிருக்கிறது என்று தெரியவில்லை. அவர்கள் பயங்கர சதித்திட்டத்துடனேயே இந்தியாவிற்குள் நுழைந்திருக்க வேண்டும் என்பதால் அவனிடம் இன்று உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்படுகிறது.
அவன் கொடுத்த தகவலைக் கொண்டு புலனாய்வுத்துறையினர்,அந்த இரண்டு தீவிரவாதிகளின் படத்தையும், அவர்களின் பெயர் விவரங்களையும் வெளியிட்டுள்ளனர்.
அவர்களின் பெயர்கள் ஜர்கம் என்கிற முகம்மது பய் மற்றும் அபு ஒகாஷா என்பதாகும். அந்த இருவரில் முகம்மது பய்யின் வயது 38 முதல் 40க்குள் இருக்கும் என்று தெரிகிறது. அபு ஒகாஷாவின் வயது 17 அல்லது 18 ஆக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
முகம்மது பய் மற்றும் அபு ஆகியோர் தொடர்ந்து இந்தியாவிலேயே பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
.