கோலாலம்பூர் – எதிர்வரும் 21 ஆகஸ்ட் 2015ஆம் நாள் மஇகா தேசியத் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நடைபெறவிருக்கும் நிலையில், கடந்த வியாழக்கிழமை 13 ஆகஸ்ட் 2015 முதல் அதற்கான வேட்புமனுப் பாரங்கள் மஇகா தலைமையகத்தால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
“சங்கப் பதிவகத்தின் விசாரணைகள், முடிவுகள், நீதிமன்ற வழக்குகள், கட்சியின் பதிவு ரத்தாகும் அபாயம், என்பது போன்ற பல்வேறு விவகாரங்களால் அலைக்கழிக்கப்பட்டு வந்த, பாரம்பரியமிக்க நமது கட்சி தற்போது புதிய பாதைக்கு திரும்பியுள்ளதையும், நடப்பு தலைமைத்துவத்தின் மீது கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வைத்துள்ள நம்பிக்கையையும் கிளைகளின் இந்த நடவடிக்கைகள் நமக்குக் காட்டுகின்றன” என்றும் இன்று வெளியிட்ட பத்திரிக்கை அறிக்கையில் மோகன் தெரிவித்தார்.
“அதேவேளையில், கட்சியின் புதிய தலைமைத்துவத்தை எதிர்வரும் ஆகஸ்ட் 21இல் சுமுகமான முறையில் நாம் தேர்ந்தெடுத்து விட்டால், அதன்பின்னர் அதிகாரத்துக்குரிய, சட்டபூர்வமான, சங்கப் பதிவகத்தால் அங்கீகரிக்கப்பட்ட புதிய தேசியத் தலைவரின் தலைமைத்துவத்தின் கீழ் நமது கட்சி மீண்டும் வலிமை பெறும், மக்கள் மன்றத்தில் அங்கீகாரம் பெறும் என்பதையும் நாம் உணர வேண்டும். புதிய தலைமைத்துவத்தின் கீழ் நாம் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டால், இந்திய சமுதாயத்திற்கு நாம் ஆற்றவேண்டிய கடமைகளை, பொறுப்புகளை நாம் இன்னும் சிறப்பாக ஆற்ற முடியும் என்பதோடு, அரசாங்கத்திலும், தேசிய முன்னணியிலும் நமது கோரிக்கைகளுக்கு, மேலும் மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பதையும் நாம் இந்த வேளையில் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றும் மோகன் தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்.
சுப்ராவுக்கு ஆதரவு பெருகுகிறது
“கட்சிக்கு அண்மையக் காலத்தில் ஏற்பட்ட சோதனைகள், சவால்கள், நெருக்கடிகள் இவற்றுக்கிடையில் பொறுமையுடனும், அனைத்துத் தரப்பினரையும் அரவணைத்து, மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளித்து, கட்சியைக் காப்பாற்றி, சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி வரும் டாக்டர் சுப்ரா, தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரது தலைமைத்துவம் தொடர்ந்தால், கட்சி மேலும் வலிமையும் உயர்வும் பெறும் என்ற எண்ணம் மஇகாவில் பரவி வருகின்றது. அதற்கேற்ப, இதுவரை வேட்புமனுப் பாரங்களைப் பெற்றுள்ள மஇகா கிளைகளும், மத்திய செயலவை உறுப்பினர்களும் டத்தோ ஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் அவர்களையே தேசியத் தலைவராக நியமனம் செய்வதில் முனைப்பு காட்டி வருகின்றன” என்றும் மோகன் தெரிவித்துக் கொண்டார்.
எனவே, மஇகா கிளைகள் அனைத்தும், தேசியத் தலைவருக்கான வேட்புமனுத் தாக்கலில் தொடர்ந்து பங்கு பெற்று, கட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் மோகன் கேட்டுக் கொண்டார்.