கோலாலம்பூர் – பெர்சே பங்கேற்பாளர்களுக்கு உற்சாகமூட்டவும், நஜிப்புக்கு எதிரான தனது போராட்டத்தைத் தொடரும் நோக்கிலும் இன்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீண்டும் பெர்சே பேரணிக்கு வருகை தந்தார்.
நேற்று இரவு 7.30 மணியளவில் பெர்சே பேரணிக்கு மகாதீர் வருகை தந்திருந்தார்.
கோலாலம்பூர், பழைய கேடிஎம் (இரயில்வே தலைமையக) இரயில் நிலையத்தில் தலையில் தொப்பியணிந்து ஸ்டைலாக, மாலை 4.30 மணியளவில், தனது துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடன் வந்திறங்கினார் மகாதீர்.
அவருடன் முன்னாள் அமைச்சரான, டத்தோ சைட் இப்ராகிம் உடன் வந்தார்.
அங்கிருந்து சென்ட்ரல் மார்க்கெட் நோக்கி நடந்து சென்ற மகாதீர், அங்கு குழுமியிருந்த பெர்சே பங்கேற்பாளர்களின் மத்தியில் சிறிது நேரம் உரையாற்றினார்.
பின்னர் அங்கு குழுமியிருந்த பத்திரிக்கையாளர்களைச் சந்தித்து அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார்.
பெர்சே பேரணிக்குத் தொடர்ந்து இரண்டு முறை வருகை தந்திருப்பதன் மூலம் இந்த பெர்சே பேரணியின் கதாநாயகனாக-ஹீரோவாக மகாதீர் ஆகிவிட்டார் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.