Home Featured நாடு “மாற்றங்களை நிலைத்தன்மை குலையாமல், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொண்டு வருவோம்” – தேசிய தின செய்தியில் டாக்டர்...

“மாற்றங்களை நிலைத்தன்மை குலையாமல், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு கொண்டு வருவோம்” – தேசிய தின செய்தியில் டாக்டர் சுப்ரா அறைகூவல்

666
0
SHARE
Ad

Subramaniam-MICகோலாலம்பூர் – நாளைக் கொண்டாடவிருக்கும் நமது நாட்டின் 58வது தேசிய தினத்தை முன்னிட்டு அனைவருக்கும் தேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ள, மஇகா தேசியத் தலைவரும், சுகாதாரத் துறை அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் “நமது முன்னோர்கள் உருவாக்கி வைத்த, கட்டிக் காத்த, சட்ட அமைப்பு முறைகள், சட்டதிட்டங்கள், அரசியல் நிலைத்தன்மைகள், நிலைகுலைந்து போகாமல், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அரசியல் மாற்றங்களைக் கொண்டுவருவோம்” என அறைகூவல் விடுத்திருக்கின்றார்.

இன்று பத்திரிக்கைகளுக்கு வெளியிட்ட தமது தேசிய தின செய்தியில் டாக்டர் சுப்ரா மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்:-

“நமது நாட்டிற்குக் கிடைத்த சுதந்திரமானது, நாட்டின் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருந்த மூவினங்களுக்கிடையில் இருந்துவந்த ஒற்றுமை, புரிந்துணர்வு, நல்லெண்ணம் ஆகியவற்றின் அடிப்படையில் வெள்ளையர்களிடமிருந்து நாம் பெற்ற விடுதலையாகும்.

#TamilSchoolmychoice

 Tunku and Sambanthanமுன்னோர்களின் தியாகங்களையும் உழைப்பையும் மறக்கக் கூடாது

இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்கு நமது முன்னோர்கள் பல தியாகங்களைச் செய்துள்ளனர் என்பதையும், கடுமையாகப் பாடுபட்டனர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அதே வேளையில் நமது நாடு இவ்வளவு தூரம் முன்னேறியிருப்பதற்கும், மேற்கத்திய நாடுகளுக்கு இணையான அடிப்படை வாழ்க்கை வசதிகளையும், வளத்தையும், மேம்பாட்டையும் இன்று கொண்டிருப்பதற்கும் முக்கியக் காரணங்கள் – சுதந்திரத்திற்குப் பின்னர் அமைந்த – இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் – நமது தேசிய முன்னணி அரசாங்கத்தின் செயல்திட்டங்கள்தான் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

Merdeka Celebrations 2015அத்துடன், சுதந்திரத்திற்குப் பின்னர் நமக்கு வாய்த்த அரசியல் தலைவர்களின் அயராத உழைப்பு, தூரநோக்கு சிந்தனை ஆகியவையும்தான் இன்றைய நமது வளர்ச்சிக்கு வித்திட்ட, உரமூட்டிய காரணங்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

நாம் இன்றைய வளர்ச்சி நிலையை அடைவதற்கு முழுமுதற் காரணமாக அமைந்தது, நாட்டின் விடுதலைக்குப் பின்னர் நமக்கென நாம் உருவாக்கிக் கொண்ட அரசியல் அமைப்புச் சட்டதிட்டங்களும், அந்த சட்ட திட்டங்களுக்கேற்ப நமது அரசியல் தலைவர்களும், மக்களும் நடந்து கொண்டு வந்ததும்தான் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எனவே, நமது இன்றைய நிலையை நாம் சர்வ சாதாரணமாகவோ, யதார்த்தமாகவோ, விளையாட்டுத்தனமாகவோ, எடுத்துக் கொள்ளக் கூடாது. நமது நாட்டில் இனங்களுக்கிடையில் நிலவி வரும் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றுக்கும் அரசியல் நிலைத்தன்மைக்கும் அவ்வப்போது ஏற்படக் கூடிய சவால்களை நாம் எதிர்கொள்ளவும் தயாராக வேண்டும்.

யாரோ ஒரு சிலர் நமது போராட்டத்தைக் கையிலெடுத்துக் கொண்டு போராடுவார்கள் என்று கருதி நாம் மெத்தனமாக இருந்தவிடக் கூடாது. அதில் நமது பங்கும் இருக்க வேண்டும் என்று கருத வேண்டும், அதற்காகப் பாடுபடவும் நாம் முன்வர வேண்டும்.

தூய்மையான அரசாங்கம் நிறுவ அனைவரும் பங்களிப்பை வழங்குவோம்

நமது நாட்டின் செல்வச் செழிப்பும், வளங்களும் பாதுகாக்கப்பட, எதிர்காலச் சந்ததியினருக்காக, நிலைநிறுத்தப்பட, தூய்மையான, ஊழலற்ற அரசாங்கம் அமைய வேண்டும், செயல்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

Fireworks-merdeka celebrations-Kuala Lumpurமஇகாவும் அத்தகைய தூய்மையான அரசாங்கம் அமைவதற்கு முன் நின்று பாடுபடும், தனது செயல்பாடுகளை வழங்கும் என்பதை கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் நான் உறுதிகூற விரும்புகின்றேன்.

ஆனால், காலங் காலமாக வேரூன்றி விட்ட, செயல்முறைகளையும், மரபுகளையும் நாம் மாற்றுவதற்கு முற்படும்போது, அந்தப் போராட்டத்தில், நாம் பெற்ற சுதந்திரத்திற்கு அடிப்படையாக அமைந்த, இனங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும், நமது நாடு உருவாவதற்கும், வளர்ச்சியடைந்ததற்கும், இன்று வெற்றிகரமாகச் செயல்படுவதற்கும் அடிப்படையாக அமைந்த அரசியல் அமைப்பு சட்டதிட்டங்கள் ஆகியவற்றையும் நாம் கைவிட்டு விடக் கூடாது, மறந்து விடவும் கூடாது.

நாம் கொண்டுவர நினைக்கின்ற தூய்மையான அரசாங்கம், அரசியல் மாற்றங்கள், ஆகியவையெல்லாம், நாம் இதுகாறும் கட்டிக் காத்து வரும் அரசியல் அமைப்பு சட்டதிட்டங்கள், அரசியல் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட வேண்டும். அப்போதுதான் அத்தகைய மாற்றங்கள் சாத்தியமாகும்போது, அவை காலங் காலமாக நிலைத்திருக்கும், அனைவருக்கும் பயன்படும்.

அப்படி இல்லாமல், எடுத்தோம், கவிழ்த்தோம் என்ற பாணியில் எந்தவொரு முறையான இலக்கும், நோக்கமும் இல்லாமல் நாம் செயல்பட்டு, நமது முன்னோர்கள் இதுவரை உருவாக்கி வைத்த, கட்டிக் காத்த, சட்ட அமைப்பு முறைகள், சட்டதிட்டங்கள், அரசியல் நிலைத்தன்மைகள், நிலைகுலைந்து போவதற்கு நாம் துணைபோகக் கூடாது.

இந்த சிந்தனைகளோடு, நமது தேசிய தினத்தை, நாம் அனைவரும் மலேசியர்கள் என்ற உணர்வோடும், ஒருமைப்பாட்டுடனும், வரவேற்போம்.

நமது நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கும், மாற்றங்களுக்கும் நம்மால் இயன்ற பங்களிப்புகளை நாம் அனைவரும் வழங்க முன்வருவோம் என்ற உறுதியை மேற்கொள்வோம்.”

– மேற்கண்டவாறு தனது தேசிய தின செய்தியில் டாக்டர் சுப்ரா தெரிவித்துள்ளார்.