Home Featured நாடு சூடு பிடிக்கத் தொடங்கும் மஇகா தொகுதித் தேர்தல்கள்! பல தொகுதிகளில் மாற்றங்கள்!

சூடு பிடிக்கத் தொடங்கும் மஇகா தொகுதித் தேர்தல்கள்! பல தொகுதிகளில் மாற்றங்கள்!

749
0
SHARE
Ad

MIC-logoகோலாலம்பூர் – சங்கப் பதிவகத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப முழு அளவிலான உட்கட்சித் தேர்தல்களை நடத்தி வரும் மஇகாவில் தற்போது தேர்தல்கள், மிக முக்கியமான மூன்றாவது கட்டத்தை அடைந்துள்ளன.

எதிர்வரும் செப்டம்பர் 18ஆம் தேதி முதல் தொடங்கும் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் பரபரப்புடனும், கடுமையான போட்டிகளோடும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காரணம், பல தொகுதிகளில் முக்கியமான தலைமைத்துவப் பதவிகள் தற்போது காலியாகக் கிடக்கின்றன. பழனிவேலு-சுப்ரா இடையிலான தலைமைத்துவப் போராட்டத்தின் காரணமாக, பழனிவேல் தரப்பினர் பல பேர் பல தொகுதிகளில் மஇகா தலைமையகத்தின் சார்பில் நடத்தப்பட்ட வேட்புமனுத்தாக்கலில் பங்குபெறவில்லை.

#TamilSchoolmychoice

இந்தத் தொகுதிகளில் எல்லாம் புதிய தொகுதித் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதால், கிளைகளுக்கிடையில் மீண்டும் அணிகள் உருவாகி கடுமையான போட்டிகளுக்கான பிரச்சாரங்கள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

சில தொகுதிகளில் பழனிவேலை ஆதரித்த பல மஇகா கிளைகள் சுப்ரா தரப்பினர் நடத்திய கிளைகளுக்கான வேட்புமனுத் தாக்கலில் பங்கு பெறாமல் ஒதுங்கிக் கொண்டன.

இதன்காரணமாக, இந்தத் தொகுதிகளில் அரசியல் ரீதியான மாற்றங்கள் –ஏற்பட்டுள்ளன. இதனால், பழனிவேல் பக்கம் போய்விட்ட கிளைகளைத் தவிர்த்த எஞ்சியுள்ள கிளைகளின் தலைவர்கள் சிலர், அந்தந்தத் தொகுதிகளில் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்ற மும்முரமாகியுள்ளதாக மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேசிய நிலையிலான தேர்தல்களுக்கு முன்னோடியான தொகுதித் தேர்தல்கள்  

அக்டோபரில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேசிய நிலையிலான துணைத் தலைவர், உதவித் தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களில் வாக்களிக்கப் போகும் பேராளர்கள் தேர்வு பெறப்போகும் களமும், இந்தத் தொகுதித் தேர்தல்கள்தான் என்பதாலும், சில தொகுதிகளில் கடுமையான போட்டிகள் உருவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

உதாரணமாக, மத்திய செயலவைக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் முதலில் நடைபெறவிருக்கும் தொகுதித் தேர்தல்களில் இருந்து தேசியப் பேராளர்களாகத் தேர்வு பெற வேண்டும். இல்லாவிட்டால் அவர்களால் மத்திய செயலவைக்கானத் தேர்தலிலோ, தேசிய உதவித் தலைவர்களுக்கான தேர்தலிலோ போட்டியிட முடியாது.

இதன் காரணமாக, மத்திய செயலவை மற்றும் உதவித் தலைவர்களுக்கான தேர்தலில் போட்டியிட ஆர்வமுள்ளவர்களும், தொகுதிகளுக்கான பேராளர்களாகத் தேர்வு பெறவும், மேலும் சிலர் தொகுதித் தலைமைப் பொறுப்பைக் கைப்பற்றவும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால், சில தொகுதிகளில் தேர்தல்கள் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

மாநில வாரியாகத் தொகுதித் தேர்தல்கள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை, செப்டம்பர் 18ஆம் தேதி கிளந்தான், கெடா, திரெங்கானு, ஜோகூர் ஆகிய மாநிலங்களின் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறுகின்றன. போட்டி இருப்பின் தேர்தல்கள் செப்டம்பர் 25ஆம் தேதி நடைபெறும்.

அடுத்த நாள் செப்டம்பர் 19ஆம் தேதி, சனிக்கிழமையன்று, மலாக்கா, பேராக், நெகிரி செம்பிலான், பினாங்கு, கூட்டரசுப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறவுள்ளன. போட்டிகள் இருப்பின், செப்டம்பர் 26ஆம் தேதி தேர்தல்கள் நடைபெறும்.

ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 20ஆம் தேதி, சிலாங்கூர், பகாங், சபா, பெர்லிஸ் ஆகிய மாநிலங்களில் உள்ள தொகுதிகளின் வேட்புமனுத் தாக்கல்கள் நடைபெறும். போட்டிகள் இருப்பின் செப்டம்பர் 27ஆம் தேதி தேர்தல்கள் நடைபெறும்.

-இரா.முத்தரசன்