புதுடில்லி – முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி மீதான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தனி நீதிமன்றத்தில் இன்று இறுதி வாதம் தொடங்கியது.
122 நிறுவனங்களுக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் மத்திய அரசுக்கு 30 ஆயிரத்து 984 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதில் மிகப் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் கூறி ஆ.ராசா, கனிமொழி மற்றும் சில நிறுவனத்தின் மீது சிபிஐ வழக்குத் தொடுத்து இது தொடர்பாகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணை சிபிஐ தனி நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இதில் 154 சாட்சிகளைச் சிப.ஐ விசாரணை செய்தது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் 29 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்.
மேலும், ஜூலை 14–ஆம் தேதியன்று சிப.ஐ தரப்பில் இந்த வழக்கு தொடர்பாகக் கூடுதலாகச் சுமார் 90 ஆவணங்களைத் தாக்கல் செய்ய அனுமதி கோரப்பட்டது.
அந்த ஆவணங்கள் தவறானவை என்றும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அந்தக் கூடுதல் ஆவணங்களைச் சரிசெய்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்புக்கும் வழங்க வேண்டும் என்றும் ஆ.ராசா- கனிமொழி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து செப்டம்பர் 1–ஆம் தேதி முதல் இறுதி வாதங்கள் தொடங்கும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி இன்று இறுதி வாதம் தொடங்கியுள்ளது. தனி நீதிமன்றத்தில் இன்று ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் ஆஜராகியுள்ளனர். இந்த இறுதி வாதம் நாளையும் நாளை மறுநாளும் தொடர்ந்து நடைபெறும்.