கோலாலம்பூர் – எம்ஏஎச்பி மற்றும் ஏர் ஆசியாவின் நிர்வாக அதிகாரிகள் வெகு விரைவில், உயர்மட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த பேச்சுவார்த்தையின் மூலம் இரு தரப்புக்கு இடையே நீண்ட நாட்களாக புகைச்சலில் இருக்கும் பிரச்சனைகள் முடிவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக ஏர் ஆசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டோனி பெர்னாண்டஸ் கூறுகையில், “கடந்த 14 வருடங்களில் முதல்முறையாக இரு தரப்பு பேச்சுவார்த்தை தொடங்க இருக்கிறது. இது ஒரு நல்ல அறிகுறி. குறைந்த கட்டண விமானப் பயணிகள் முனையம் எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்து இரு தரப்பும் பல்வேறு கருத்து வேறுபாடுகளை கொண்டிருப்பதை விட, இணைந்து செயல்பட வேண்டிய பொதுவான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், எம்ஏஎச்பி மீது ஏர் ஆசியா தொடர்ந்து இருக்கும் 409 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு கோரிய வழக்கு தொடரும் என்றும் அவர் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற இருக்கும் தேதிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.