பெங்களூரு – டில்லி மற்றும் பெங்களூர் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பின்னணி யாரும் எதிர்பார்க்காத வண்ணம் உள்ளது. ‘தனி ஒருவன்’ படப் பாணியில், ஒரு சிறிய குற்றத்தின் பின்னணியில் கொடூரக் கொலை நடந்துள்ளது.
வாட்சாப் மூலம் மிரட்டல் விடுத்தவர் கோகுல்(படம்) என தெரிய வந்துள்ள நிலையில், அவர் தீவிரவாதியோ? பயங்கரவாதியோ? அல்ல கட்டிய மனைவிக்கு நம்பிக்கை துரோகம் செய்து அவரை கொலை செய்த கொலையாளி என தெரிய வந்துள்ளது. பெங்களூரில் கணினித்துறையில் பொறியாளராகப் பணியாற்றி வந்த கோகுல், கேரளாவில், தனது பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பை படித்துள்ளார். அங்கு அவர், வகுப்பு தோழியுடன் காதல் வயப்பட்டுள்ளார். 5 வருடங்கள் காதலித்த அவர்கள் சூழ்நிலை காரணமாக பிரிய நேர்ந்தது.
இருவரும் பிரிந்து, தனித்தனியாக திருமணம் செய்து கொண்டனர். மனைவியுடன் டெல்லி சென்ற கோகுல், கடந்த 2011-ம் ஆண்டு பேஸ்புக் மூலமாக தனது முன்னாள் காதலியுடன் மீண்டும் நட்பை புதுப்பித்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் தங்கள் காதலுக்கு இடையுறாக இருப்பார்கள் என தனது மனைவியையும், காதலியின் கணவனையும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, கடந்த ஜூலை 27-ம் தேதி தனது மனைவியை கொலை செய்த அவர், தனது மாமனாரின் காவல்துறை பின்னணியால் தப்பித்துக் கொண்டார். கோகுலின் மாமனார் உட்பட அனைவரும் அதனை தற்கொலை என்றே நம்பினர்.
முதல் காரியம் வெற்றி அடைந்த நிலையில், காதலியின் கணவனை கொலை செய்வதற்கு திட்டமிட்டு காத்திருந்துள்ளார். இதற்கிடையில், மூன்று வெவ்வேறு தொலைபேசி எண்கள் மூலம் தனது காதலியையும், அவளின் கணவனையும் பல்வேறு வகையில் இடைஞ்சல் செய்து வந்துள்ளார்.
காதலியின் கணவனிடம் தான் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதி என்கிற ரீதியில் மிரட்டல் விடுத்துள்ளார்.ஒருகட்டத்தில், காதலியின் கணவரை தீவிரவாதியாக சித்தரித்து காவல்துறையிடம் மாட்டிவிட நினைத்த அவர், குறிப்பிட்ட அந்த தொலைபேசி எண் மூலம், விமான நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
அந்த எண்ணை காவல்துறை நோட்டமிட்டால், அந்த எண்ணுடன் தொடர்புடைய காதலியின் கணவர் சிக்குவார் என்பது கோகுலின் எண்ணமாக இருந்துள்ளது. இங்கு தான், கோகுல் காவல்துறையிடம் வசமாக சிக்கிக் கொண்டார். அதே எண்ணில், அவர் தனது காதலியிடமும் பேசியுள்ளதை சைபர் பிரிவு காவல்துறையினர் கண்டுபித்தனர். இறுதியில் காதலியை விசாரித்த காவல்துறையினர், கோகுலை கைது செய்தனர்.
விமான நிலையங்களுக்கு வரும் போலி மிரட்டல் தான் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், அதன் பின்னணியில் தற்கொலை என நம்பப்பட்ட கோகுலின் மனைவி மரணம் கொலை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..