Home இந்தியா ராஜஸ்தான் அவசரச் சிகிச்சை ஊர்தி ஊழல்: கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கப் பிரிவும் வழக்கு!

ராஜஸ்தான் அவசரச் சிகிச்சை ஊர்தி ஊழல்: கார்த்தி சிதம்பரத்தின் மீது அமலாக்கப் பிரிவும் வழக்கு!

611
0
SHARE
Ad

23-1422023057-karthi-chidambaram-114-600புதுடில்லி – ராஜஸ்தான் மாநிலத்தில் 2010 முதல் 2013ஆம் ஆண்டுகளில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியின் போது அவசரச் சேவை ஊர்தி(ஆம்புலன்ஸ்) வழங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக அம்மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் மத்திய அமைச்சர் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் ரவி கிருஷ்ணா ஆகியோர் மீது சிபிஐ வழக்குத் தொடுத்திருந்தது.

தற்போது அவர்கள் மீது கூடுதலாக அமலாக்கப் பிரிவும் வழக்குப் பதிவு செய்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுவதும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குவதற்கு ஜிகித்சா சுகாதார நிறுவனத்துக்கு ஒப்பந்தம் விடப்பட்டது. இந்த ஒப்பந்தம் வழங்கியதில் பெருமளவு ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

#TamilSchoolmychoice

அதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராஜஸ்தானுக்குப் பாஜக-வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே சிந்தியா முதலமைச்சரானதும், இந்த ஊழல் தொடர்பாக ஜெய்ப்பூர் மேயர் பங்கஜ் ஜோஷி காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

இப்புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.இந்த வழக்கை சிபிஐ ஏற்று நடத்த வேண்டும் என்று சிபிஐ-க்கு மாநில அரசு கடிதம் எழுதியது.

இதன்படி இந்த வழக்கு விசாரணையை சிபிஐ ஏற்றுக்கொண்டது.

இதுதொடர்பாக ராஜஸ்தான் முன்னாள் முதல்வர்அசோக் கெலாட் மீதும், ஜிகித்சா சுகாதார நிறுவனத்தின் இயக்குநர்களாக இருந்ததாகக் கருதப்படும் சச்சின் பைலட், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், முன்னாள் மத்திய அமைச்சர் வயலார் ரவியின் மகன் கிருஷ்ணா, ஸ்வேதா மங்கள், அப்போதைய மாநிலச் சுகாதார அமைச்சர் துரு மிர்சா ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

இவ்வழக்கு விசாரணை நடந்து வரும் வேளையில், இந்த ஊழல் பணப் பரிமாற்றத்தில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி தற்போது அமலாக்கப் பிரிவும் கார்த்தி சிதம்பரம், அசோக் கெலாட் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது.