புதுடில்லி – நேதாஜி குடும்பத்தினரை அக்டோபர் மாதம் சந்திக்க இருப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தனது வானொலி உரையில் தெரிவித்துள்ளார்.
வானொலியில் மாதந்தோறும் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றும் பிரதமர் மோடி, நேற்று தனது 12-ஆவது உரையை நிகழ்த்தினார்.
அப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரைச் சந்தித்து பேச உள்ளது பற்றி தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
“கடந்த மே மாதம் கொல்கத்தா சென்றிருந்தபோது நேதாஜி குடும்பத்தினரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதே நேதாஜி குடும்பத்தினரை எனது அலுவலகத்திற்கு அழைக்க முடிவு செய்தேன். கடந்த வாரம் அந்தச் சந்திப்புத் திட்டம் உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, அவரது குடும்ப உறுப்பினர் 50 பேர் அடுத்த மாதம் பிரதமர் இல்லத்துக்கு வரச் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சந்திப்பிற்காகப் பல்வேறு நாடுகளில் வசிக்கும் நேதாஜி குடும்பத்தினர் முதல் முறையாக ஒன்று கூடுகின்றனர்.
வேறு எந்தப் பிரதமருக்கும் கிடைக்காத இந்த வாய்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்” என்று கூறினார்.
நேதாஜி குடும்பத்தாரைப் பிரதமர் அலுவலகத்திற்கு அழைத்த பிரதமர் மோடி, நேதாஜி பற்றி மத்திய அரசிடம் உள்ள ரகசிய ஆவணங்களை வெளியிடுவது தொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி,மேற்கு வங்க அரசு வசமிருந்த நேதாஜி தொடர்பான 64 பக்க ரகசிய ஆவணங்களை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
ஆனால், மத்திய அரசு வசமிருக்கும் நேதாஜி தொடர்பான ஆவணங்களை வெளியிட மத்திய அரசு தயங்கி வருகிறது.