மதுரா – உத்தரபிரதேசத்தின் மதுரா நகரில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், காங்கிரசை ஆப்பிள் நிறுவனத்துடன் ஒப்பிட்டு பேசியுள்ளது கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.
உபியில் காங்கிரசின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதனை மாற்ற வேண்டும் என்பதற்காக ராகுல் காந்தி பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார். அப்படி ஒரு பிரச்சாரக் கூட்டத்தில், “ஆப்பிள் நிறுவனம் முதலில், மிகவும் பின்தங்கிய நிலையில் தான் இருந்தது. உபி-ல் நாம் இருப்பது போல. அதன் பிறகு அசுர வளர்ச்சி அடைந்தது. அதுபோல், நாமும் வளர வேண்டும். ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் அந்நிறுவனத்தை எப்படி முன்னேற்றினாரோ நாமும் அதுபோல் காங்கிரசை முன்னேற்ற வேண்டும்” என்று கூறினார்.
இதற்கு பலத்த கரகோஷம் இருந்தது. இதற்கிடையே இணையவாசிகள் ராகுலின் இந்த பேச்சை வழக்கம்போல் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
“ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தின் வியாபாரத்தை பெருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்தார். காங்கிரசும் கடந்த ஆட்சிகாலத்தில் தனது ‘வியாபாரத்தை’ பெருக்க வேண்டும் என்பதற்காக கடுமையாகத் தான் உழைத்தது” என்பது போன்ற கேலிப் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.