பெய்ஜிங் – ஆப்பிள் வரும் 25-ம் தேதி (நாளை மறுநாள்) தனது புதிய தயாரிப்பான 6எஸ் மற்றும் 6எஸ் பிளஸ் ஐபோன்களை அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வெளியிடத் தயாராகி வருகிறது. இந்நிலையில், ஆப்பிளுக்கு அதிர்ச்சி தரும் விதமாக, அதன் ‘ஆப் ஸ்டோரில்’ (App Store) மால்வேர்கள் பரப்பப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.
குறிப்பாக சீனாவில் ஐபோன் பயனர்கள் அதிகம் பதிவிறக்கம் செய்யும் ‘வீசேட்’ (Wechat) போன்ற சில முக்கிய செயலிகள் வழியாக இந்த மால்வேர்கள் பரப்பப்படுவதாக தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ‘எக்ஸ்கோஸ்ட்’ (XcodeGhost) என்ற பெயரில் பரவும் இந்த மால்வேர்கள், பயனர்களின் தனித்த கடவுச்சொற்கள் மற்றும் தகவல்களை திருடிக் கொள்வதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்பு நிறுவனத்தைச் சேர்ந்த ஆலன் காக்கெரில் கூறுகையில், “ஆப்பிள், மால்வேர்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும்படியான, வலுவான ஆப் ஸ்டோர் அமைப்பினை கொண்டுள்ளது. ஆனால், ஹேக்கர்கள் தொடர்ந்து பல்வேறு புதிய வழிகளில் ஊடுருவி வருகின்றனர்” என்று கூறியுள்ளார்.
இது குறித்து ஆப்பிள் நிறுவனம் கூறுகையில், “முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு செயலிகள் முடக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், ஐபோன்களில் மால்வேர்கள் பரவுவது தடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளது.
வீசேட் போன்ற பிரபலமான நம்பத்தகுந்த செயலிகளில் இந்த மால்வேர்கள் பரப்பப்பட்டுள்ளது ஆப்பிளை, சற்றே பதற்றம் அடைய வைத்துள்ளது. இன்னும், ஓரிரு தினங்களில் தனது மிகப் பெரிய வர்த்தக சந்தையில் (சீனா), புதிய தயாரிப்பினை ஆப்பிள் வெளியிட இருக்கும் சூழலில், இந்த சதி செய்யப்பட்டு இருப்பதால், ஆப்பிளின் நற்பெயரில் கலங்கத்தை ஏற்படுத்தி, வர்த்தகத்தை பாதிக்க வேண்டும் என்பதே ஹேக்கர்களின் நோக்கமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.