இந்தப் படத்தில் சித்தார்த் , த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பாஜ்வா, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். படத்துக்கு இசை ஹிப் ஹாப் தமிழா ஆதி. அவினி சினிமேக்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் குஷ்பூ சுந்தர் இப்படத்தைத் தயாரித்துள்ளார்.
இப்படத்தின் இறுதிக் காட்சிக்காக 103 அடி உயர பிரம்மாண்ட அம்மன் சிலையைக் கலை இயக்குநர் குருராஜ் உருவாக்கியுள்ளார். அந்தச் சிலையின் முன்பு ஏராளமான நடனக் கலைஞர்களைக் கொண்டு பிரம்மாண்டமான முறையில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
இந்த அம்மன் சிலையானது ஆசியாவிலேயே மிகப் பெரிய அம்மன் சிலை என்றும், இதைப் போன்ற 103 அடி உயர அம்மன் சிலை வேறு எங்கும் கிடையாது என்றும் சுந்தர் சி கூறினார்.
இந்த அம்மன் சிலை ‘லிம்கா புக் ஆப் ரெகார்ட்ஸ்’ என்னும் உலக சாதனை முயற்சிகளுக்கான புத்தகத்தில் இடம் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சிலை குறித்துக் கலை இயக்குநர் குருராஜ் கூறியதாவது: “அரண்மனை 2 படத்தின் இறுதிக்கட்ட பாடல் காட்சிக்குப் பிரம்மாண்டமான அம்மன் சிலை ஒன்று தேவைப்பட்டது.
அதை கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் உருவாக்கலாம் என்றுதான் யோசித்தோம். ஆனால் பார்க்கும் போது தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதால் உண்மையான அம்மன் சிலையை 103 அடி உயரத்தில் உருவாக்கினோம்.
இந்தச் சிலையைச் செய்து முடிக்க நாற்பது நாட்களுக்கு மேல் ஆனது. முறைப்படி அம்மன் சிலையை வடிவமைப்பவர்கள் அதை எப்படி உருவாக்குவார்களோ அதே போல் விரதம் இருந்து முறைப்படி இந்த 103 அடி அம்மன் சிலையை நானும் என் குழுவினரும் உருவாக்கினோம்” என்றார்.
பாடல் காட்சியை இயக்கிய நடன இயக்குநர் ஷோபியும், ஒளிப்பதிவாளர் யூ.கே.செந்தில் குமாரும் “மிகப் பிரம்மாண்டமான 103 அடி உயர அம்மன் சிலை முன்பு அம்மன் பாடலை எடுத்தது மிகவும் புதுமையாக இருந்தது” எனக் கூறியுள்ளனர்.