கொழும்பு – இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது தொடர்பாக அனைத்துலக நீதிமன்றத்தில் சாட்சியமளிக்கத் தயார் என்று இலங்கையின் முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் தலைவர் சையத் ராத் அல் உசேன், ஜெனீவாவில் வெளியிட்ட வரைவு அறிக்கையில், இலங்கை போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி அனைத்துலக நீதிபதிகள் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்.
ஆனால் இதை எதிர்த்து இலங்கை அரசு, உள்நாட்டு விசாரணையே போதுமானது என்று கூறி வருகிறது. மேலும், இதை வலியுறுத்தும் வரைவு அறிக்கையை இலங்கை அரசு வருகிற 30-ஆம் தேதி ஐநா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யவுள்ளது.
இந்நிலையில், ஐநா மனித உரிமைகள் ஆணையத் தலைவரின் அறிக்கையின்படி இலங்கை போர்க்குற்றங்கள் பற்றி விசாரிக்க அனைத்துலக நீதிபதிகள் குழு அமைக்கப்பட்டால், அதில் ஆஜராகி சாட்சியம் அளிக்கத் தான் தயாராக இருப்பதாகச் சரத் பொன் சேகா கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின் போது, இலங்கை ராணுவத் தளபதியாக இருந்து இலங்கை ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர் சரத் பொன்சேகா.
இவர் கடந்த 2010-ஆம் ஆண்டு அளித்த பேட்டி ஒன்றில், சரண் அடைந்த விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களைப் படுகொலை செய்ய அப்போதைய அதிபர் ராஜபக்சேயின் தம்பியும் முக்கிய அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டதாகக் கூறி இருந்தார்.
ஐநா மனித உரிமை ஆணையத் தலைவரின் அறிக்கையில், வெள்ளைக் கொடியுடன் சரண் அடைந்தவர்களை இலங்கை ராணுவம் சுட்டுக் கொன்றதாகக் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகா சாட்சியம் அளித்தால் அது ராஜபக்சேவுக்கும் ராஜபக்சேவின் குடும்பத்தினருக்கும் மிகப் பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்பது உறுதி.