கோலாலம்பூர் – அன்வாருக்கு வழங்க வேண்டிய அவசர சிகிச்சைகள் காரணமின்றி தாமதப்படுத்தப்படுவதாக அவரது வழக்கறிஞர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் தோள்பட்டை வலிக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவக் குழுவிற்குத் தலைமை வகிக்கும் எஸ்.ஜெயேந்திரனை, அப்பொறுபில் நீக்கும்படியும் அன்வாரின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அன்வாருக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் மருத்துவ நிபுணர்கள் வழங்கி வருகின்றனர் என சுகாதார தலைமை இயக்குநர் நூர் ஹிசாம் அப்துல்லா கூறியிருப்பதை அவர்கள் மறுத்துள்ளனர்.
“இன்று வரை அவசர மற்றும் தேவையான மருத்துவ சிகிச்சைகள் காரணமே இன்றி தாமதமாகின்றது” என்று அன்வாரின் வழக்கறிஞர்களான சிவராசா, என்.சுரேந்திரன் மற்றும் லத்தீபா கோயா ஆகியோர் நேற்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்துள்ளனர்.