Home Featured நாடு பிகேஆர் பிளவு வதந்தி: அஸ்மினுக்கு எதிராக காலிட் செய்யும் சதியா?

பிகேஆர் பிளவு வதந்தி: அஸ்மினுக்கு எதிராக காலிட் செய்யும் சதியா?

578
0
SHARE
Ad

Azmin Ali and Khalid Ibrahimஷா ஆலம்- பிகேஆர் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அக்கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

கட்சியில் உள்ள மூன்றாவது அணியைச் (சக்தி) சேர்ந்தவர்கள் இணைந்து புதுக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுவது உண்மையல்ல என்றும் அவர் கூறியுள்ளார்.

“பிகேஆர் வலுவாக உள்ளது. நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம். கட்சியில் மூன்றாவது சக்தி அல்லது ஐந்தாவது சக்தி என்று எதுவும் இல்லை. இங்கிருப்பது ஒரே கட்சி மற்றும் ஒரே தலைமை தான். நாங்கள் ஒருமித்த குரலிலேயே பேசுகிறோம்” என்று நேற்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முன்னதாக சிலாங்கூர் முன்னாள் மந்திரி பெசார் டான்ஸ்ரீ காலிட் இப்ராகிம் தனது முகநூல் பதிவொன்றில், பிகேஆர் கட்சியில் பிளவு ஏற்பட்டால் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றும், அக்கட்சியைச் சேர்ந்த சிலர் இணைந்து புதுக்கட்சி தொடங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
அக்கட்சியின் செயல்பாடுகள் முறையாக நிர்வகிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், அதன் காரணமாகவே இவ்வாறு நிகழக்கூடும் என தாம் நம்பியதாக தெரிவித்திருந்தார்.

காலிட் இப்ராகிம் இப்பதிவு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போதே அஸ்மின் அலி அதைத் திட்டவட்டமாக மறுத்தார்.

காலிட் இப்ராகிம் பிகேஆர் உறுப்பினர் அல்ல என்றும், அக்கட்சி விவகாரங்களில் இருந்து அவர் விலகி நிற்க வேண்டும் என்றும் அஸ்மின் அலி கூறினார்.

“அவர் ஒரு வெளி நபர். எனவே பிகேஆரிலிருந்து அவர் விலகி நிற்க வேண்டும். எங்கள் கட்சியை எவ்வாறு நிர்வகிக்க வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும். டாக்டர் வான் அசிசா தலைமையில் பிகேஆர் மேலும் வலுப்பெற்றுள்ளது.

“தேசிய அளவில் பொருளாதார மற்றும் தலைமைத்துவ ரீதியில் நாங்கள் சவால்களை எதிர்கொள்வது உண்மைதான். எனினும் இத்தகைய சவால்களை வான் அசிசா தலைமையில் எதிர்கொண்டு எங்களால் சமாளிக்க முடியும்” என்றார் அஸ்மின் அலி.

இதற்கிடையே பக்காத்தான் ஹராப்பான் உருவாக்கம் குறித்த வான் அசிசாவின் அறிவிப்பால் அதிருப்தி அடைந்துள்ள அஸ்மின் அலி, தனது ஆதரவாளர்களின் துணையுடன், வான் அசிசாவின் அறிவிப்பால் அதிருப்தி அடைந்துள்ள மேலும் சிலருடன் இணைந்து புதிய அணியை உருவாக்கி உள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.