கோலாலம்பூர்- மத உணர்வுகளைத் தூண்டும் வகையில் சிவப்புச் சட்டைப் பேரணியை அரசாங்கமே திட்டமிட்டு செயல்படுத்தியதாக துன் மகாதீர் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அளித்துள்ள பேட்டி ஒன்றில், 1எம்டிபி விவகாரத்திலிருந்து மக்களை திசைதிருப்பவே சிவப்புச் சட்டைப் பேரணி நடைபெற்றது என்றும் கூறியுள்ளார்.
“செப்டம்பர் 16 பேரணியை அரசாங்கமே ஏற்பாடு செய்தது. பெர்சே பேரணி மலாய்க்காரர்களுக்கு எதிரான சீனர்களின் பேரணி என்று சித்தரித்தனர். ஆனால் உண்மை அதுவல்ல. எனினும் 1எம்டிபி தொடர்பான பெர்சேயின் கோரிக்கைகளிலிருந்து மக்கள் கவனத்தை திசை திருப்ப வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு இருந்தது. அதனால் இன விவகாரத்தை கையில் எடுத்தனர். இது ஆபத்தான போக்கு” என்று மகாதீர் தெரிவித்துள்ளார்.
பெர்சே பேரணியில் தாம் பங்கேற்றது குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், தமது கருத்துக்களை வெளிப்படுத்த மஞ்சள் சட்டை பேரணி நல்ல வாய்ப்பாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
“மஞ்சள் சட்டைப் பேரணியே கடைசி வாய்ப்பாக இருந்தது. எனது கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டிய தேவை இருப்பதாக உணர்ந்தேன். பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பெர்சேவைப் போலவே நானும் கருதுவதால் அப்பேரணிக்குச் சென்றேன். இதில் இனம் சார்ந்த அம்சங்கள் ஏதும் இல்லை.
“பெர்சேவில் அனைத்து இன மக்களும் பங்கேற்றனர். அது மலாய் அரசுக்கு எதிரான சீனர்களின் பேரணி அல்ல. அது இனவாதப் பேரணியும் அல்ல. எனவே தான் அவர்கள் என்ன கோரிக்கைகளை வலியுறுத்துகிறார்கள் என்பதை காணவும் எனது ஆதரவை தெரிவிக்கவும் சென்றேன்” என்று மகாதீர் கூறியுள்ளார்.